விஜய் ஏன் மக்களிடம் இதுவரை செல்லவில்லை? ஆ.ராசா கேள்வி
சென்னை: கரூர் உயிர்ப்பலி சம்பவம் அறிந்ததும் முதல்வர் முதிர்ச்சி அடைந்த அரசியல் தலைவராக அணுகி உள்ளார். நீங்கள் ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள். ஏன் மக்களிடம் இதுவரை நீங்கள் செல்லவில்லை என்று விஜய்க்கு ஆ.ராசா எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: விஜய் கரூரில் கலந்துகொண்ட பிரசார நிகழ்ச்சியில் விலை மதிக்க முடியாத 41 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். எப்போது ஒரு தேவை வருகிறதோ, ஒரு பரபரப்பான பதற்றம் வருகிறதோ, மக்களுக்கு தேவை வருகிறதோ, அப்போது எங்களுடைய உயிரையும் பணயம் வைத்து களத்திலே போய் நிற்பதுதான் திமுகவின் வரலாறு என்பதற்காக சில உதாரணங்களை சொன்னேன்.
அதை போலவே, இப்போது எங்களுடைய முதல்வரும் செய்திருக்கிறார். இதிலே அரசியல் கிடையாது. ஆனால் களத்திலே நிற்க வேண்டிய தலைவர்கள், ஏன் கரூரில் களத்திலே நிற்கவில்லை?. செய்தி அறிந்ததற்கு பிறகும் அவசர அவசரமாக செய்தியாளர்களை சந்திப்பதற்குகூட வெட்கப்பட்டு கொண்டு, பயந்து கொண்டு ஏன் சென்னைக்கு வந்தீர்கள்? ஆதவ் அர்ஜுனா என்கின்ற நபர் ஒரு டிவிட் போடுகிறார். அந்த டிவிட்டில் நேபாளத்தில் நடந்தது போல, இங்கு ஒரு புரட்சி நடக்கும் என்கிறார். அரசியலமைப்புக்கு எதிரான ஒரு கருத்தைப் பதிவிட்டு, அதற்கு விமர்சனம் வந்த உடனே எடுக்கிறார். நான் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்த பதிவை எடுக்கிற அளவிற்கு தமிழ்நாட்டுடைய மக்கள் உணர்வோடு இருக்கிறார்கள். இந்த உணர்வு அவர்களுக்கு தெரிந்த பிறகுதான் எடுத்திருக்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.