விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி; 12 போலீசாரிடம் சிபிஐ விசாரணை
கரூர்: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தில் சாலையின் இருபுறமும் குறிப்பிட்ட தூரம் வரை 3டி லேசர் ஸ்கேனர் கருவி மூலம் அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் வேலுசாமிபுரம் பகுதியில் உள்ள மளிகைக்கடைகள், பெட்ரோல் பங்க், டிபார்ட்மெண்ட் ஸ்டோர், மெடிக்கல் ஷாப், பேக்கரி, ஜவுளிக்கடை ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் என 306 பேருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் 13 பேர், நேற்று 15 பேர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் விடுதிக்கு வந்து சிபிஐ முன் தனித்தனியாக ஆஜராகினர். அப்போது அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் 3வது நாளாக இன்று, சம்பவத்துன்று வேலுசாமிபுரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர்கள், காவலர்கள் என 12 போலீசாரை பயணியர் மாளிகைக்கு வரவழைத்து தனித்தனியாக அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது,வேலுசாமிபுரத்திற்கு எத்தனை மணியில் இருந்து ரசிகர்கள் வர தொடங்கினார்கள், விஜய் வருவதற்கு முன் ரசிகர்கள் எவ்வளவு பேர் கூடியிருந்தார்கள், எவ்வளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி விசாரித்தனர்.