விஜய் பேசும்போது மின்சாரம் தடை செய்யப்படவில்லை: மின்வாரிய அதிகாரி ராஜலட்சுமி பேட்டி
கரூர்: விஜய் பேசும்போது மின்சாரம் தடை செய்யப்படவில்லை: மின்வாரிய அதிகாரி ராஜலட்சுமி பேட்டி அளித்துள்ளார். தவெக கரூர் பிரச்சாரத்தில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே கூட்ட நெரிசலுக்கு திடீரென அங்கு ஏற்பட்ட மின் தடையே காரணம் என சொல்லப்பட்டது. ஆனால், இதை திட்டவட்டமாக மறுத்துள்ள மின்வாரியம், விஜய் அங்கு பேசும்போது மின்தடை எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. கரூரில் விஜய் பேசும்போது திடீரென மின்தடை ஏற்பட்டதாகவும் இதுவே அங்கு கூட்ட நெரிசல் அதிகரிக்க காரணம் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
விஜய் பேசும்போது மின்சாரம் முழுமையாக இருந்தது என்றும் அருகே இருந்த கடைகளில் விளக்குகள் எரிந்து கொண்டு இருப்பதை வீடியோக்களில் பார்க்க முடிகிறது என்றும் எனவே மின்தடை என்பது பொய்யான தகவல் என தலைமை பொறியாளர் ராஜலட்சுமி தெரிவித்தார்.
மேலும், தவெகவினர் வைத்திருந்த ஜெனரேட்டர்கள் மற்றும் விளக்குகள் கூட்ட நெரிசலால் அணைந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், விஜய் வருவதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி, தவெகவினரே மின் இணைப்பு துண்டிக்க சொன்னதாகவும் இருப்பினும், அந்த கோரிக்கையை மின்வாரியம் மறுத்துவிட்டதாகவும் ராஜலட்சுமி கூறினார்.
தவெகவினர் அமைத்திருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்துவிட்டது. விஜய் வருவதற்கு முன்பு தொண்டர்கள் மரம், மின்கம்பம் மீது ஏறி இருந்ததால் சிறிது நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மரம், மின்கம்பம் மீது ஏறி இருந்தவர்களை போலீஸ் உதவியுடன் கீழே இறங்கிவிட்டபின், மின்சாரம் வழங்கப்பட்டது