கரூரில் இன்றும், நாளையும் எடப்பாடி 27ல் விஜய், 28ல் அன்புமணி; அடுத்தடுத்து படையெடுக்கும் தலைவர்கள்
கரூர்: கரூரில் இன்றும், நாளையும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். 27ம் தேதி விஜய், 28ம் தேதி அன்புமணி ஆகியோரும் கரூரில் பரப்புரை மேற்கொள்ள உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று(25ம் தேதி), நாளை கரூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக வேடசந்தூரில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு மாலை 6.30 மணிக்கு கரூர் வரும் அவர் வேலுசாமிபுரத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பின்னர் சேலம் செல்லும் எடப்பாடி பழனிசாமி, நாளை மாலை 6 மணிக்கு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி, கிருஷ்ணராயபுரம் தொகுதி, குளித்தலை தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னர் அவர் சேலம் செல்கிறார். இதேபோல் தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள்(27ம் தேதி) கரூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். பாமக தலைவர் அன்புமணி 28ம் தேதி மாலை 4 மணிக்கு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் அருகில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக உழவர் சந்தை வரை நடைபயணம் செல்கிறார். பின்னர் உழவர் சந்தை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். தவெக தலைவர் விஜய் 27ம் தேதி திருவள்ளூர், வடசென்னையில் பிரசாரம் செய்வார் எனவும், டிச. 13ம் தேதி தான் நாமக்கல், கரூரில் பிரசாரம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் திடீரென நாளை மறுதினம் அவர் கரூரில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதேபோல் அன்புமணி 27ம் தேதி கரூரில் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென இவர் தனது பிரசாரத்தை 28ம் தேதிக்கு மாற்றி உள்ளார். விஜய் செல்போன் மூலம் பேசி கேட்டுக்கொண்டதால் தான் அன்புமணி தனது பிரசாரத்தை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. எடப்பாடி, விஜய், அன்புமணி ஆகியோர் அடுத்தடுத்து 4 நாட்கள் பிரசாரத்துக்கு வருவது கரூர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.