விஜய்யுடன் ரகசிய சந்திப்பு; காங்கிரஸ் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி கட்சியிலிருந்து நீக்கம்?; டெல்லி தலைமைக்கு புகார் அளிக்க முடிவு: செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி
சென்னை: தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப் பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு என அடுத்தடுத்த தேர்தல் பணிகளை வேகப்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருப்பதால் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. அதே நேரம் அதிமுக கூட்டணியில் பாஜ இடம் பெற்றதால் முன்னாள் எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் பல்வேறு கட்சிகளில் ஐக்கியம் ஆகி வருகின்றனர்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தைகளை திமுக தலைமை தொடங்கியுள்ளது. இதற்கிடையே, பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வியை வைத்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி ஒதுக்கீட்டில் பிரச்னை ஏற்படும் என்றும், அதனால் தவெக உடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்றும் சிலர் வதந்திகளை பரப்பி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ேசாடங்கர் தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அடங்கிய ஐவர் குழுவை நியமித்தது. இதன் மூலம் தமிழக காங்கிரஸ் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும், இந்த குழு அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முதல் கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தியது.
திமுகவில் தொகுதி பங்கீட்டு குழு அமைத்த உடன் கூட்டணி கட்சிகள் மற்றும் காங்கிரசுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நடிகர் விஜயின் வீட்டுக்கு காங்கிரஸ் நிபுணர்கள் மற்றும் தரவு பகுப்பாய்வு குழுவின் அகில இந்திய தலைவரான பிரவீன் சக்ரவர்த்தி நேற்று இரவு ரகசியமாக சந்தித்து பேசினார். இது காங்கிரசார் மத்தியில் புயலை கிளப்பியது. டெல்லி அரசியல் செய்து வரும் பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் தெரியாமல் தன்னந்தனியாக சென்று விஜய்யை சந்தித்தது காங்கிரசார் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுதியது. அதன் பின்பு தான் அவர் தவெகவில் இணைவதற்காக விஜய் உடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற தகவல் வெளியானது. மயிலாப்பூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் டிமாண்ட் வைத்ததாக கூறப்படுகிறது.
இருவரது சந்திப்பு குறித்த தகவல் காங்கிரசார் மத்தியில் பற்றி எரியும் நிலையில், கட்சி தலைவர்கள் யாருக்கும் தெரியாமல் சென்று வந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரித்து கொண்டு வருவதாகவும் விஜய்க்கு உறுதி அளித்து வந்த தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளதாக காங்கிரசார் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பல்வேறு வாக்குறுதிகளுடன் தவெகவில் இணைவதில் தீவிரம் காட்டும் பிரவீன் சக்கரவர்த்தியை கட்சியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று தமிழக காங்கிரசார் டெல்லி தலைமைக்கு புகார்களை தட்டி விட்டு வருகின்றனர். இதனால் பிரவீன் சக்கரவர்த்தியை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் இறங்கவும் தயங்க மாட்டோம் என்று காங்கிரசார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைமைக்கு தெரியாமல் திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்ற பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை குறித்து மேலிடத்தில் புகார் செய்யப்படும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்பு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: த.வெ.க. தலைவர் விஜய்யை, பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து எங்களுக்கு தெரியாது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தரப்பில் 5 பேர் குழு அமைக்கப்பட்டு, அந்த குழு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது தான் எங்களுக்கு தெரியும். விஜய்யுடன் பேசுங்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவத்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை. பேசவும் சொல்லவில்லை.
இந்தியா கூட்டணி வலிமையாகவும், ஒற்றுமையாகவும் உள்ளது. இந்த கூட்டணியை சிதைக்க முடியாது. கூட்டணியை உடைக்க முடியாது. காங்கிரஸ் கட்சி அண்ணா அறிவாலயத்தை தவிர்த்து வேறு எங்கும் சென்றோமா? விஜய் - பிரவீன் சக்கரவத்தி சந்திப்பு குறித்து மேலிடத்திடம் பேச உள்ளேன். திருநாவுக்கரசர் திருமண வீட்டிற்கு சென்ற போது, செங்கோட்டையன் அங்கு வந்துவிட்டார். அதனால் மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பு அது.. இதை கட்சியுடன் இணைக்க தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.