விஜய் லாங் ஜம்ப், ஹை ஜம்ப் தாண்ட நினைத்தால் முடியாது: நயினார் பளீச்
நெல்லை: ‘நடிகர் விஜய் புதிய கட்சி துவங்கிய உடன் லாங் ஜம்ப், ஹை ஜம்ப் தாண்ட நினைத்தால் முடியாது’ என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நெல்லையில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நான் டெல்லி சென்றது கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திப்பதற்காக அல்ல. எனது சொந்த வேலை காரணமாகவே டெல்லி சென்று வந்துள்ளேன். இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. எம்ஜிஆர், புரட்சித் தலைவராக இருந்த போதுதான் புதிய கட்சியை துவங்கினார். அவருக்கு மக்கள் செல்வாக்கு இருந்தது. அதனால் அவர் கட்சி தொடங்கியதும் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார். ஒவ்வொரு தலைவர்களுக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது. யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.
விஜய், தவெகவை ஆரம்பித்ததும் முதல்வராக வேண்டும் என நினைக்கிறார். அது சாத்தியம் இல்லை. எம்ஜிஆர் நடிகராக இருக்கும் போதே தீவிரமாக கட்சி பணியாற்றி, அதன் பிறகு புதிய கட்சியை தொடங்கி முதலமைச்சர் ஆனார். விஜய் நடிகராக இருந்து தற்போதுதான் கட்சியை தொடங்கி உள்ளார். அதற்குள் லாங் ஜம்ப், ைஹ ஜம்ப் தாண்ட வேண்டும் என்றால் அது சாத்தியமாகாது. அவர் ஒரு கவுன்சிலராக கூட இருந்ததில்லை. முதலில் அவர் தேர்தலை சந்தித்து பலத்தை நிரூபிக்கட்டும்.
இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ெபாதுமக்களுக்கு அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். முதல்வர் இதனை செய்து கொடுப்பார் என நினைக்கிறேன். முதல்வரிடம் கேட்டால் கண்டிப்பாக செய்து கொடுப்பார். எனது தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி தந்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செங்கோட்டையனை பாஜ இயக்குகிறதா?
நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், ‘செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளது அதிமுக - பாஜ கூட்டணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. செங்கோட்டையனை பாஜ இயக்குவதாக இருந்தால் அவர் ஏன் தவெகவில் இணைய வேண்டும்?. பாஜவிற்கு அவர் வந்திருக்க வேண்டும். அதிமுகவில் இருப்பவர்கள் பாஜவை நம்பித்தான் இருந்தேன் என்றால் எப்படி பொறுப்பு ஏற்க முடியும். பாஜ யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. அதிமுக உள்கட்சி பிரச்னையை பேசுவது நியாயமாக இருக்காது. 2026 சட்டமன்ற தேர்தலில் 3வது, 4வது அணி வந்தாலும் அதிமுக-பாஜ கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மட்டுமல்ல அனைவரையும் ஒன்றிணைக்க காலநேரம் உள்ளது’ என்றார்.