த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை எதிர்த்த வழக்கில் தங்களையும் சேர்க்க தே.ம.க மனு
சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகக் கூறி தாக்கல் செய்த வழக்கிற்கு ஆதரவாக, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் த.வெ.க தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சார சுற்றுப் பயணங்களுக்கு காவல் துறையினர் கடுமையான நிபந்தனைகள் விதித்துள்ளதாக த.வெ.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், பிரச்சாரத்துக்கு அனுமதி தரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து அனுமதி வழங்குமாறு கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு, செப்டம்பர் 24ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சி தலைவர் எம்.எல்.ரவி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு இவ்வளவு கடுமையான நிபந்தனைகளை விதிக்காத அரசு, விஜய்க்கு விதிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.