கனிமவளத்துறை அதிகாரி வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு: திண்டுக்கல், நெல்லையில் பரபரப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனராக இருப்பவர் செல்வசேகர். இவர், கடந்த 2024ம் ஆண்டு முதல் திண்டுக்கல்லில் பணிபுரிந்து வருகிறார். இதற்காக கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஏழுமலையான் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். குடும்பத்தினர் சொந்த ஊரான திருநெல்வேலியில் உள்ளனர். இந்நிலையில், செல்வசேகர் வீட்டிற்கு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை 6.30 மணியளவில் வந்து சோதனை நடத்தினர். இந்த சோதனை 9.30 மணி வரை நீடித்தது.
அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘செல்வசேகர் 2015 முதல் 2022 வரை திருநெல்வேலி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் பணிபுரிந்துள்ளார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில், வழக்குப்பதிந்து சோதனை நடத்தினோம்’ என்றனர்.
நெல்லை
நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை நெல்லை என்ஜிஓ காலனி ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள கனிமவளத்துறை உதவி இயக்குநர் செல்வசேகரின் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. செல்வசேகர் பல்ேவறு குவாரிகளை பினாமி பெயரில் எடுத்து நடத்துவதாகவும், மோட்டார் பைக் ஒன்றின் ஏஜென்சியை பினாமி பெயரில் நடத்துவதாகவும் புகார்கள் உள்ளன. மேலும் கனிமவளத்துறையில் நடைச்சீட்டு வழங்கும்போது, ஒரு நடைக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்ற நிலையில், அதை மையமாகக் கொண்டு விசாரணை நடத்தியதாக நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.