புதிய முயற்சி! புதிய வெற்றி!
புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெளியில் இருக்கின்ற தடைகளை விட நம்முடைய மனதில் இருக்கக்கூடிய தடைகள் தான் அதிகம். புதிய முயற்சிகளை எடுக்கின்ற போது தவறு நேர்ந்துவிடுமோ என்ற பயம், நஷ்டம் ஆகி விடுமோ என்ற எண்ணம், இந்தப் புதிய முயற்சி எடுப்பதால் என்ன கிடைக்கப் போகின்றது என்ற சலிப்பு, இது போன்ற தடைகள் நம்முடைய மனதிலே வரும்.வெற்றி பெறாமல் இழப்பதை விட, முயற்சி செய்யாமலே இழப்பது மோசம்!என்கிறார் பிரான்சிஸ் பேக்கன் என்கிற எழுத்தாளர். உங்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்துவிடும் என்றுசொல்வதற்கில்லை.ஆனால் நீங்கள் புதிய சிந்தனையுடன், புதிய கருத்துக்களை முயன்று பார்க்கிறபோது வெற்றி வாய்ப்புகள் அதிகம்.புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறவர் பல புதிய அனுபவங்களை,மகிழ்ச்சிகளைப் பெற முடியும்.புதிய சவால்களை ஏற்றிடுங்கள். அவற்றை முதல் தடவை வெல்ல முடியாமல் போகலாம். ஆனால் தொடர்ந்து முயல்கிறபோது வெல்லப்படாதது எதுவும் இல்லை. மற்றவர்கள் முயன்றதை விட சிறப்பாக முயல்கிற போது நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். அவர்கள் தொட தயங்குகிறார்கள். தொடராமல் விடுகிறார்கள். ஏதோ ஒரு புள்ளியில் அவர்களுடைய செயல்பாடு தவறாகி விட்டிருக்கும். நீங்கள் அதை துணிவுடன் கையிலெடுக்கிறீர்கள், தொடர்ந்து முயல்கிறீர்கள், முறையாகச் செயல்பட்டு வெற்றி பெறுகிறீர்கள்.
கிரகாம்பெல் அப்படித்தான் தொலைபேசியை கண்டுபிடித்தார். ரைட் சகோதரர்கள் அப்படித்தான் விமானத்தை கண்டுபிடிப்பதில் வெற்றி கிடைத்தது.ஒன்றைத் தொடர்ந்து செய்கிற போது அதுவே சிறந்த பயிற்சியாய் அமைகிறது.உங்கள் செயல் நேர்த்தி பெற்று விடுகிறது.‘‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழித்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொள்வார்'' என்ற பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆகவே நம்முடைய புதிய முயற்சிகளுக்கு தடையாக நாம் இருக்க வேண்டாம். தவறு நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் புதிய முயற்சிகளை முடக்க வேண்டாம்.தவழ்ந்து பழகாமல் யாரும் நடந்து பழகவில்லை, புதிதாக சைக்கிள் ஓட்டப் பழகுகின்ற பொழுது கீழே விழுவதும், எழுவதும்தான் வாழ்க்கை என்பதை நாம் புரிந்து கொள்கின்றோம். தண்ணீருக்குள் எட்டிக் குதிக்காமல் நீச்சலை யாரும் பழக முடியுமா? அலை எப்போது ஓய்வது? தலை எப்போது முழுகுவது? என்று கிராமத்தில் சொல்வார்கள். ஆகவே நல்ல நேரங்கள் வரட்டும் நல்ல நேரங்கள் வரட்டும் என்று நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழித்துவிட்டு, நாம் அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொள்ளாமல் முயற்சி எடுப்பதற்கு இப்பொழுதே துணிச்சலோடு நாம் செயலில் இறங்குவோம். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை மங்கையைக் சொல்லலாம்.
ராஷ்மி வஸ்வானி, டெல்லி ஐ.எம்.ஐயில் முதுகலை பட்டம் படித்துக்கொண்டிருந்தார். பெங்களூரில் இருக்கும் அவரது வீட்டுக்கு அவ்வப்போது விடுமுறைக்காக செல்வார். அந்த சமயங்களில் பொழுதுபோக்காக சாக்லேட் செய்வது இவருக்கு வழக்கம், பிறகு இவரது அப்பாவுக்கு அந்த சாக்லேட்டுகள் பிடித்துப் போகவே அடிக்கடி செய்து அப்பாவை குஷிபடுத்தினார்.பிறகு தனது படிப்பை முடித்ததும் நிதி ஆலோசனை நிறுவனத்தில் வேலை கிடைத்தது. காலை 9மணியிலிருந்து மாலை 5 மணிவரை பணி. மூன்று மாதத்திலேயே இந்த வேலை போரடிக்கவே, பழையபடி சாக்லேட்டில் கவனம் செலுத்தினார். தீபாவளி சமயத்தில் சின்னதாக ஒரு ஸ்டால் போட்டு விற்றுப் பார்த்தார், மக்களிடம் அது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கார்பரேட் நிறுவனம் ஒன்றுக்கு ஒரே ஒரு பாக்ஸ் சாக்லேட் கொடுத்தார். உடனேயே அவர்களிடமிருந்து 200 பாக்ஸ் ஆர்டர் கிடைத்தது. இது தான் எங்கள் முதல் கார்பரேட் ஆர்டர் என்கிறார் பெருமிதத்துடன். இந்த 33 வயது தொழில்முனைவோர் ராஷ்மி வஸ்வானி. இவர் ரேஜ் சாக்லேட்டியர்(Rage Chocolatier) என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார்.
நிறுவனங்கள், விழாக்காலங்களில் இனிப்புகளையும், பழங்களையும் பரிசாக வழங்குவதை போலவே இப்போது மக்கள் சாக்லேட்டுகளையும் பரிசளிக்க துவங்கியிருக்கிறார்கள். பொதுவாகவே நீண்டகாலம் தாங்கக்கூடிய வித்தியாசமான, புதுவிதமான பரிசுகளில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்கிறார் ராஷ்மி. சாதாரண சாக்லேட்டுக்கும்,வெளிநாட்டு சாக்லேட்டுகளுக்கும் நீண்ட இடைவெளி இருப்பதை கவனித்தார். தன்னுடைய சாக்லேட் தயாரிப்பில் புது யோசனைகளையும் புகுத்தினார்.ராஷ்மி டெல்லியில் படித்துக்கொண்டிருந்த போது அவரது சகோதரி சட்டம் படித்துக்கொண்டிருந்தார். இவர் சாக்லேட் செய்யும்போது அவரும் ஆர்வமாக சில உதவிகளை செய்வார். ஒரு நாள் இது இவ்வளவு பெரிய அளவுக்கு செல்லும் என நாங்கள் யோசித்ததே இல்லை. இன்று நாங்கள் சில்லறை விற்பனைத்துறையின் ஒரு பகுதியில் அடியெடுத்து வைத்திருக்கிறோம் என்கிறார் ராஷ்மி.ராஷ்மி மனிதநேயமிக்கவர். குழந்தைகள் எல்லோருக்குமே சாக்லேட் பிடிப்பதால் அவ்வப்போது தன் குழுக்களோடு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்களுக்கு சென்று சாக்லேட்டை அவர்களுக்கு இலவசமாக வினியோகிப்பதை முக்கியமாக கருதுகிறார்.
சாக்லேட்டுகளை உலகத்தரத்திற்கு ஈடாக வடிவமைத்ததோடு அல்லாமல் சில புதுமையான செய்திகளை உள்ளடக்கி க்ரீட்டிங் கார்டுகளை போன்ற தோற்றத்தில் சாக்லேட்டுகளை அளிப்பதால், ‘‘சிலர் இதை க்ரீட்டிங் கார்டு என்று தப்பாக புரிந்துகொண்டு வாங்கிச் சென்றுவிட்டு, கவரை திறந்து பார்த்த பிறகு தான் சாக்லேட் என்று தெரிந்துகொள்கிறார்கள்” என்கிறார் புன்னகையுடன் ராஷ்மி.இன்று ரேஜ் சாக்லேட்டியர் பெங்களூருவின் மிகமுக்கியமான பகுதி ஒன்றில் கடை துவங்கியிருக்கிறார்கள். இந்த கடையில் சாக்லேட்டுகளை அன்றன்றைக்கு செய்து அன்றே விற்றுவிடுகிறார்கள்.இப்போது இவர் நிறுவனத்தில் 12 பேர் வேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பெல்லாம் நானே சாக்லேட் செய்து கொண்டிருந்தேன், இப்போது என் மேனேஜருக்கும், குழுவுக்கும் வேலையை பகிர்ந்தளித்திருக்கிறேன். இது ஒரு மிகப்பெரிய பொறுப்பு என்கிறார் ராஷ்மி. இப்போது இந்நிறுவனத்தில் இவரது அம்மா அப்பாவும், இரண்டு உடன்பிறந்தவர்களையும் பங்குதாரர்களாக ஆக்கியுள்ளார்.
இதை துவங்கிய சமயத்தில் இந்த தொழில் வெற்றி பெறுவோமா என்று ஒருபோதும் நினைக்கவில்லை.ஆனால் எதைச் செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது.இப்போது இதுவே வணிக மாதிரி(business mode) ஆகியிருக்கிறது. இது சவாலான ஒன்று என்கிறார் ராஷ்மி. இவர் மார்கெட்டுக்கு வந்த புதிதில் இவருடையதை எல்லோரும் காப்பியடித்துவிடும் ஆபத்திருந்தது. காரணம் இவர் மிக மிக மெதுவாக துவங்கி, மெல்ல நகர்ந்து, இயற்கையான வளர்ச்சியை எட்டியதே.ஆரம்பத்தில், சாக்லேட்டின் ஒவ்வொரு பகுதியும் என் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது எல்லாமே பிரித்து அளிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார். கர்நாடக அரசின் சுற்றுலாத்துறையோடு இணைந்த பிறகு, நினைவுச்சின்னங்களை உள்ளடக்கிய சாக்லேட் தயாரிப்பிலும் ஈடுபாடு காட்டத் துவங்கி இருக்கிறார் ராஷ்மி. பிரபலமான நினைவுச்சின்னங்கள், கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற இடங்கள் போன்றவை சாக்லேட் அட்டைகளில் புகுத்தப்பட்டு பன்னாட்டு விமானதளத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.இந்த புத்திசாலித்தனமான முறை சுற்றுலாவை பிரபலப்படுத்த உதவியிருக்கிறது.
ஒரு குழந்தை எங்கள் கடைக்குள் நுழைந்து, எங்கள் சாக்லேட்டை முகமெல்லாம் பூசி கொண்டு சாப்பிடுவதை பார்க்கும் போது பூரிப்பு ஏற்படுகிறது.இப்போதைக்கு எங்கள் கவனமெல்லாம் சாக்லேட்டை சரியான நேரத்தில் விநியோகிக்க வேண்டும் என்பதே, இப்போது தொழில் கணிசமாக வளர்ந்திருக்கிறது.மேலும் தான் படித்த மேலாண்மைப் படிப்பு தற்போது உபயோகமுள்ளதாக ஆகியிருக்கிறது என்கிறார் ராஷ்மி.தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே ராஷ்மியின் ஊக்கம். ரேஜ் சாக்லேட்டியரை துவங்கியதாலேயே இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இது சிலிர்ப்பாக இருக்கிறது என்கிறார். என்ன இருந்தாலும் இனிப்பான சாக்லேட்டை யாராவது வேண்டாமென்று சொல்லுவார்களா என்கிறார் புன்முறுவலுடன்.யாருக்கெல்லாம் தொழில் தொடங்கும் கனவு இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் இவர் சொல்லும் ஆலோசனை, சிறியதாக துவங்குங்கள் அதில் அதிகம் கவனம் செலுத்தி உழையுங்கள் என்பதே.பொருளின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யாதீர்கள். மார்க்கெட்டை சோதித்துக்கொண்டே மெல்லமாக வளருங்கள். உங்களிடம் புதிய சிந்தனை இருந்தால் அதை புதிய முயற்சியுடன் செயல்படுத்துங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக துணிச்சல் இல்லையேல் விளைச்சல் இல்லை என்கிறார் ராஷ்மி.ஆகவே இவரைப் போல உங்களுடைய முதல் அடியை எடுத்து வையுங்கள். புதிய முயற்சியை முடுக்கி விடுங்கள். முயற்சிகள் தோற்கலாம், ஆனால் நாம் முயற்சி செய்வதில் தோற்றுவிடக்கூடாது.