ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னையின் அடையாளமான விக்டோரியா மஹால் ஆகஸ்ட் 15ம் தேதி மீண்டும் திறப்பு: புதுப்பொலிவுடன் பழமை மாறாமல் புனரமைப்பு
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்கும் பணிகள் அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரால் 20.3.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் நடந்தது. இந்த விக்டோரியா மஹால் முழு கட்டிடத்தையும் அதன் தொன்மை மாறாமல் பழுது பார்க்கும் பணிகள், நில அதிர்வினை தாங்கும் வகையில் மறுசீரமைப்பு, முழு கூரையினையும் சீரமைப்பு, வெளிப்புறம் மற்றும் உட்புறம் மறு சீரமைப்பு, மரத்தளம் மர படிக்கட்டுகள், தரை மற்றும் முதல் தளத்தினை தற்போதைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மேம்படுத்துதல், கலை நயத்துடன் கூடிய முகப்பு விளக்குகள் அமைக்கும் பணி, இயற்கையை ரசிக்கும் வகையில் புல்தரைகள், தரைத் தளத்தில் அருங்காட்சியகம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், முதல் தளத்தில் விஐபி நிர்வாக இடமாகவும் மற்றும் கலாச்சார இடமாகவும் பயன்படுத்தபட உள்ளது. தற்போது இதற்கான இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்டோரியா பொதுக்கூடத்திற்கான புனரமைப்பு பணிக்கான விரிவான திட்ட அறிக்கையில் அதன் முழுமையான உறுதித்தன்மையுடன் பழமை மாறாமல் இருப்பதை உறுதி செய்ய துணை ஆணையர் தலைமையில் 10 நபர்கள் கொண்ட குழு, மியூசியத்திற்கென 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பட்டது. விக்டோரியா மஹால் முதல் தளத்தை, தற்போதைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மேம்படுத்துதல், கலைநயத்துடன் கூடிய முகப்பு விளக்குகள் அமைத்தல் ஆகிய பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் விக்டோரியா மஹாலின் பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளதால் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.