துணை ஜனாதிபதி தேர்தல்; சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை வேட்பு மனு தாக்கல்: பாஜக கூட்டணி கூட்டத்தில் பாராட்டு
புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில் இன்று நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், கிரண் ரிஜிஜு, எல்.முருகன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். வரும் செப். 9ம் தேதி குடியரசு துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை மறுநாளுடன் வேட்பு மனு தாக்கல் முடிகிறது. அதனால் நாளை (ஆக. 20) காலை 11 மணிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சி.பி.ராதாகிருஷ்ணனின் தேர்தல் பரப்புரை மேலாளராகவும், ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தேர்தல் முகவராகவும் செயல்படுவார்கள். முன்னதாக ஜார்கண்ட் மற்றும் தெலங்கானா ஆளுநராகப் பணியாற்றியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனின் அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறனைப் பிரதமர் மோடி பாராட்டினார். அதேபோல் மற்ற தலைவர்களும் சி.பி.ராதாகிருஷ்ணனை பாராட்டினர்.