குடியரசு துணைத் தலைவர் தேர்தல்; பாஜக கூட்டணி எம்பிக்களுக்கு பிரதமர் மோடி விருந்து!
புதுடெல்லி: துணை குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது வெற்றியை உறுதி செய்வதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.நாட்டின் 14வது துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், உடல்நிலையைக் காரணம் காட்டி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூலை 21ம் தேதி தனது பதவியை விட்டு விலகினார். இதன் காரணமாகவே தற்போது துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 9ம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தலுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரது வெற்றி ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், வாக்கெடுப்பிற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது வரும் 8ம் தேதி, பிரதமர் மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இரவு விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன் மூலம் கூட்டணியின் ஒற்றுமையையும் வலிமையையும் வெளிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வாக்குகளைச் சரியாகப் பதிவு செய்வது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து உறுப்பினர்களும் வரும் 6 முதல் 8ம் தேதி வரை ெடல்லியில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். துணை ஜனாதிபதி தேர்தல் என்பது ரகசிய வாக்கெடுப்பு முறை என்பதாலும், இதில் கொறடா ஆணை பிறப்பிக்க முடியாது என்பதாலும், வாக்குகளைப் பதிவு செய்வதில் எந்தத் தவறும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கவனமாக உள்ளது. மேலும், பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பாரத் ராஷ்டிர சமிதி போன்ற ‘இந்தியா’ கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆதரவைப் பெற்று, பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேநேரம் எதிர்கட்சிகளின் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுவதால், அவர் அனைத்து கட்சிகள் எம்பிக்களையும் சந்தித்து தனக்கு ஆதரவு கோரி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.