துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தமிழக எம்பிக்கள் தனித்தனி விமானங்களில் டெல்லி பயணம்
சென்னை: துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக, கனிமொழி உள்ளிட்ட தமிழக எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து தனித்தனி விமானங்களில் டெல்லி சென்றனர். இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, துணை ஜனாதிபதி பதவிக்கு இன்று டெல்லியில் தேர்தல் நடக்கிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையில், டெல்லியில் நாடாளுமன்ற மத்திய கட்டிடத்தில் நடக்கிறது.
இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக நேற்று தனித்தனி விமானங்களில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். நடிகர் கமல்ஹாசன், திரைப்பட விருது சம்பந்தமாக துபாய்க்கு சில தினங்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றுள்ளார். அவர் துபாயில் இருந்து நேரடியாக விமான மூலம் டெல்லிக்கு வந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பார் என்று கூறப்படுகிறது. ஜி.கே.வாசன் உள்ளிட்ட சில எம்பிக்கள் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்று விட்டனர். மேலும் சில எம்பிக்கள், மதுரை திருச்சி விமான நிலையங்களில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர். சில எம்பிக்கள் ஏற்கனவே டெல்லியில் இருக்கின்றனர்.