துணை ஜனாதிபதியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: நினைவு பரிசு வழங்கி நலம் விசாரிப்பு
மதுரை: மதுரையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சந்தித்து பேசினார். மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் நேற்றிரவு தங்கியிருந்தார்.
இந்நிலையில், தென்காசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்றிரவு மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்க வந்தார். அப்போது துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அங்கு தங்கிருப்பதை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக அவரை ேநரில் சந்தித்தார். அப்போது அவருக்கு பொன்னாடை போர்த்திய முதல்வர் நினைவு பரிசு வழங்கினார். பின்னர் அவர்கள் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்தனர். சந்திப்பின் போது எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
* தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: நம் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் துணை ஜனாதிபதியாக உயர்ந்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுடன். மாமதுரை மண்ணில் சந்தித்து உரையாடினேன். தமது சீரிய பணிகளால். அவர் தமிழ்நாட்டுக்கும். இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார், என பதிவிட்டுள்ளார்.