துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜ கூட்டணி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி: 452 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றார், 300 ஓட்டுகளுடன் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தோல்வி
புதுடெல்லி: நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை விட 152 வாக்குகள் அதிகம் பெற்று தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். நாட்டின் துணை ஜனாதிபதியாகவும், மாநிலங்களவை தலைவராகவும் இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல் நலக்குறைவு பிரச்னையை காரணம் காட்டி திடீரென பதவியை ராஜினாமா செய்ததால், நாட்டின் 15வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று நடந்தது.
பா.ஜ தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்தவரும், மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டார். இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டார். இந்ததேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த 788 எம்பிக்களும் வாக்களிக்க தகுதியானவர்கள். நேற்று நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள அறை எண் 101ல் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்தது.
மாநிலங்களவை பொதுச்செயலாளர் பி.சி.மோடி தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதல் நபராக பிரதமர் மோடி வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் ஒன்றிய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, அர்ஜுன் ராம் மேக்வால், ஜிதேந்திர சிங், இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் வந்தனர்.
பிரதமர் மோடியை தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அர்ஜூன் ராம் மேக்வால், பிரகலாத் ஜோஷி, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாடி தலைவர் ராம் கோபால் யாதவ், காங்கிரஸ் முத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், நாசர் உசேன் ஆகியோர் வாக்களித்தனர். 92 வயதான முன்னாள் பிரதமர் தேவகவுடா சக்கர நாற்காலியில் வாக்குச் சாவடிக்கு வந்தார்.
ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கைகோர்த்தபடி வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்தனர். திமுக எம்பிகள் டி.ஆர்.பாலு, கனிமொழி, நியமன எம்பி இளையராஜா உள்பட தமிழ்நாடு எம்பிக்களும் வரிசையாக நின்று தேர்தலில் வாக்களித்தனர். ஒடிசாவில் உள்ள பிஜூ ஜனதா தளம் கட்சி, தெலங்கானாவில் உள்ள பாரத் ராஷ்டிர சமிதி, பஞ்சாப் மாநிலத்தின் ஷிரோண்மணி அகாலி தளம் கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. இந்த 3 கட்சிகளுக்கும் 12 எம்பிக்கள் உள்ளனர்.
மேலும் மக்களவையில் ஒரு இடமும், மாநிலங்களவையில் 6 இடமும் காலியாக இருப்பதால் மொத்த ஓட்டுகள் எண்ணிக்கை 788ல் இருந்து 769ஆக குறைந்தது. இதனால் 386 ஓட்டுகள் பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார். பா.ஜ கூட்டணிக்கு 427 எம்பிக்கள் ஆதரவு உள்ளது. மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் 11 எம்பிக்களும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தனர். இதனால் பா.ஜ கூட்டணியின் பலம் 438 ஆக உயர்ந்தது. இந்தியா கூட்டணிக்கு 324 எம்பிக்கள் ஆதரவு உள்ளது.
ஐதராபாத் எம்பி ஓவைசியும் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு வாக்களித்தார். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. மொத்தம் 767 வாக்குகள் பதிவானது. அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதனால் சி.பி.ராதாகிருஷ்ணன் 152 வாக்குவித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்தல் முடிவுகளை துணை ஜனாதிபதி தேர்தல் அதிகாரி பி.சி.மோடி அறிவித்தார். மொத்தம் பதிவான 767 வாக்குகளில் 15 வாக்குகள் செல்லாத ஓட்டாக அறிவிக்கப்பட்டன.
* சி.பி.ராதாகிருஷ்ணன் யார்?
* 67 வயதான சி.பி.ராதாகிருஷ்ணன் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒரு மூத்த பாஜ தலைவர். தமிழ்நாட்டின் திருப்பூரில் பிறந்த இவர், ஆர்எஸ்எஸ் தொண்டராக இருந்து பாஜவில் வளர்ந்தார்.
* 1998 மற்றும் 1999ல் நடந்த மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் இருந்து போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது முக்கிய நாடாளுமன்றக் குழுக்களுக்குத் தலைவராகவும், ஐ.நா. பொதுச் சபையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் சென்றார்.
* 2003 மே 12 முதல் 2006 செப்டம்பர் 22ஆம் தேதி வரை தமிழ்நாடு பா.ஜ மாநில தலைவராக இருந்தார். அப்போது 93 நாள் மாநிலம் தழுவிய ரத யாத்திரை சென்றார்.
* 2023 பிப்ரவரி 12 அன்று ஜார்க்கண்ட் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். 2024 மார்ச் 19 அன்று தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
* 2024 ஜூலை 27 அன்று மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது துணை ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார்.
* வெற்றிகரமாக செயல்பட வாழ்த்துகள்: ஜனாதிபதி முர்மு
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். பொது வாழ்வில் உங்கள் பல ஆண்டு அனுபவம் நாட்டின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். வெற்றிகரமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் பதவிக்காலத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
* சிறந்த துணை ஜனாதிபதியாக இருப்பார்: மோடி
2025 துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். அவரது வாழ்க்கை எப்போதும் சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் நமது அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்தி, நாடாளுமன்ற விவாதத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த துணைஜனாதிபதியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்.
* ஜனாதிபதி, பிரதமர் மோடிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் நன்றி
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோருக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், ‘நமது ஜனாதிபதி முர்முவுக்கு எனது மனமார்ந்த நன்றி. நமது பிரதமர் மோடிக்கும் எனது மனமார்ந்த நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
* எதிர்க்கட்சிகளுக்கு சம இடம் வேண்டும்: கார்கே
காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்ட பதிவில், துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டு வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டியின் உற்சாகமான மற்றும் கொள்கை ரீதியான போராட்டத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது ஒரு தேர்தலை விட அதிகம்; இது ஒரு சித்தாந்தப் போராக இருந்தது, நமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க சர்வாதிகாரப் போக்குகளைக் கொண்ட அரசாங்கங்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய துணை ஜனாதிபதி, நாடாளுமன்ற மரபுகளின் உயர்ந்த நெறிமுறைகளைப் பேணி, எதிர்க்கட்சிகளுக்கு சமமான இடத்தையும் கண்ணியத்தையும் உறுதி செய்வார். மேலும் ஆளும் கட்சியின் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
* கயிறு வாரிய தலைவர் முதல் துணை ஜனாதிபதி வரை...
தமிழ்நாட்டின் திருப்பூரில் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி பிறந்த சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் என்கிற சி.பி.ராதாகிருஷ்ணன் வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றவர். 16 வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தவர். 1974ல் பா.ஜ மாநில செயற்குழு உறுப்பினரானார். 1998, 1999ல் எம்பியாக தேர்வு செய்யப்பட்டாலும், 2004, 2014, 2019 தேர்தலில் தோற்றாலும் மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு அரசியலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வளர்ச்சி அதிவேகமாக மாறியது.
2016ஆம் ஆண்டு சி.பி.ராதாகிருஷ்ணன் கொச்சியில் உள்ள கயிறு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த பதவியில் அவர் 4 ஆண்டுகள் இருந்தார். 2020-2022ஆம் ஆண்டு வரை கேரள பா.ஜ பொறுப்பாளராக இருந்தார். அதன்பிறகு ஜார்க்கண்ட், தெலங்கானா, புதுச்சேரி, மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது துணைஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
* சித்தாந்தப் போராட்டம் இன்னும் அதிக வீரியத்துடன் தொடர்கிறது: சுதர்சன் ரெட்டி அறிவிப்பு
துணை ஜனாதிபதி தேர்தலில் 300 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்த இந்தியா கூட்டணி வேட்பாளர் பி.சுதர்சன் ரெட்டி கூறியதாவது: நமது மாபெரும் குடியரசின் ஜனநாயக செயல்முறைகளில் நிலையான நம்பிக்கையுடன் இந்த முடிவை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். என்னை கூட்டு வேட்பாளராக நியமித்த இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
நமது ஜனநாயகம் வெற்றியால் மட்டுமல்ல, உரையாடல், கருத்து வேறுபாடு மற்றும் பங்கேற்பு ஆகியவற்றின் உணர்வாலும் பலப்படுத்தப்படுகிறது. ஒரு குடிமகனாக, நம்மை ஒன்றிணைக்கும் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் நான் உறுதியாக இருக்கிறேன். நமது அரசியலமைப்பு நமது தேசிய வாழ்க்கையின் வழிகாட்டும் ஒளியாகத் தொடர்ந்து இருக்கட்டும். புதிதாக தேர்வு செய்யப்பட்ட துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். இவ்வாறு கூறினார்.
* ஜெகதீப் தன்கர் வாழ்த்து
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,’ உங்கள் பதவி உயர்வு நமது நாட்டின் பிரதிநிதிகளின் நம்பிக்கையையும், ஆழமான தன்னம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. உங்கள் பரந்த அனுபவத்தைக் கருத்தில் கொண்டால், துணை ஜனாதிபதி பதவி நிச்சயமாக அதிக மரியாதையையும், பெருமையையும் பெறும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
* என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?
நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியாக இருந்தபோதிலும் துணைஜனாதிபதிக்கு வழக்கமான சம்பள பலன்கள் கிடையாது. இருப்பினும் மாநிலங்களவைத் தலைவர் பதவிக்காக மாதத்திற்கு ரூ.4 லட்சம் சம்பளம் மற்றும் சலுகைகள் கிடைக்கும். அதே சமயம் துணை ஜனாதிபதி பதவிக்கான பங்களா, மருத்துவ பராமரிப்பு, ரயில் மற்றும் விமானப் பயணம், தரைவழி இணைப்பு, மொபைல் போன் சேவை, தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் ஊழியர்கள் போன்ற பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
* சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக இந்தியா கூட்டணியின் 14 வாக்குகள்
துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதே நேரத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளைப் பெற்றார். பதிவான வாக்குகளில் 15 வாக்குகள் செல்லாததாக பதிவானது. இருப்பினும் இந்தியா கூட்டணியை சேர்ந்த 14 எம்பிக்கள் அணி மாறி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்தது தெரிய வந்துள்ளது.
* துணை ஜனாதிபதி பதவியை அலங்கரிக்கும் 3 வது தமிழர்
தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் இதுவரை துணை ஜனாதிபதி பதவி வகித்துள்ளனர். சி.பி.ராதாகிருஷ்ணன் 3வது தமிழர்.
1. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1952 மே 13 முதல் 1962 மே 13 வரை: 10 ஆண்டுகள்
2. ஆர்.வெங்கட்ராமன் 1984 ஆகஸ்ட் 31 முதல் 1987 ஜூலை 24 வரை - 2 ஆண்டு, 327 நாட்கள்.
3. சி.பி.ராதாகிருஷ்ணன் - 2025 செப்.9 முதல்