NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு
டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த ஜூலை 21ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதம் முடிவடையவிருந்த நிலையில் அவர் திடீரென ராஜினாமா செய்தது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், அவருக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே ஏற்பட்ட நம்பிக்கையின்மை மற்றும் கருத்து வேறுபாடுதான் ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவுக்கு முக்கிய காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெகதீப் தன்கரின் திடீர் விலகலைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ள துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணியை பாஜக தலைமை மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முழுவீச்சில் தொடங்கின.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
NDAவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை தொகுதியில் 5 முறை போட்டியிட்டு இரு முறை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2003-2006 வரை தமிழ்நாடு பாஜகவின் மாநில தலைவராக பதவி வகித்துள்ளார்.ஒன்றிய கயிறு வாரியத்தின் தலைவராகவும் இருந்த அவர் தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்தார். தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பதவியில் உள்ளார்.