வேட்புமனு தாக்கல் 21ம் தேதியுடன் முடியும் நிலையில் துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?: நாளை பாஜக நாடாளுமன்ற கூட்டம் கூடுகிறது
புதுடெல்லி: உடல்நலக் குறைவால் குடியரசு துணை தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த வேட்பாளரை தேர்வு செய்வதற்காக பாஜக நாடாளுமன்ற குழு நாளை கூடவுள்ளது. நாட்டின் குடியரசு துணை தலைவராகவும், மாநிலங்களவை தலைவராகவும் இருந்த ஜெகதீப் தன்கர் (74), தனது உடல்நிலையை காரணம் காட்டி கடந்த ஜூலை 21ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ‘மருத்துவ ஆலோசனையை ஏற்று எனது உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 67(ஏ) பிரிவின்படி, துணை குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும், கடந்த 6ம் தேதி நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில், வேட்பாளரை இறுதி செய்யும் முழு அதிகாரம் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அதேபோல் எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பிலும் குடியரசு துணை தலைவர் பதவிக்கான பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டம் நாளை (ஆக. 17) டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் தரப்பில் கூறும்போது, ‘பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்பார்கள். இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளர் யார்? என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும். வேட்பாளரை இறுதி செய்வதற்காக இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிற மூத்த எம்பிக்கள் பங்கேற்பார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டது. குடியரசு துணை தலைவருக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 7ம் தேதி தொடங்கிய நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் 21ம் தேதி என்பதால் குடியரசு துணை தலைவர் தேர்தலுக்கான வேலைகளை ஆளுங்கட்சி தரப்பும், எதிர்கட்சிகள் தரப்பும் தீவிரப்படுத்தி உள்ளன.