துணை ஜனாதிபதியாகி மக்கள் சேவை ஆற்றுவார் : தாய் நெகிழ்ச்சி பேட்டி
திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜகவில் பல்வேறு பதவிகளை வகித்து தற்போது மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இருந்து வருகிறார். இந்நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி, துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார்.இதனைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக திருப்பூரைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிரா மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பெயரை பாஜக பரிந்துரை செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து திருப்பூரில் உள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டில் அவரது தாய் ஜானகி அம்மாள் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர், ஜானகி அம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது: என் மகன் பிறந்த போது முன்னாள் துணை ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போல் வர வேண்டும் என ஆண்டவனை பிரார்த்தனை செய்து பெயர் வைத்தோம்.
இன்று அது நிறைவேறும் தருணமாக மாறி உள்ளது. நிச்சயம் துணை ஜனாதிபதி தேர்தலில் என் மகன் வெற்றி பெற்று தொடர்ந்து மக்கள் சேவையை செய்வார்.இது திருப்பூருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை கூட்டக்கூடிய தருணமாக அமைந்திருக்கிறது. என் மகன் சி.பி.ராதாகிருஷ்ணன் பெயரை பரிந்துரை செய்த பாஜகவிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.