குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: NDA கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!!
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணனை முறைப்படி வேட்பாளராக அறிவிப்பதற்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி முறைப்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வாழ்த்தி பேசும்போது, சி.பி.ராதாகிருஷ்ணன் பண்பானவர், பணிவானவர். எந்த சர்ச்சைக்கும் ஆளாகாதவர். ஊழல்கறை இல்லாதவர். எளிமையான வாழ்க்கை வாழ்கிறவர். எனவே அவரை அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அனைவரும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி முன்னிலையில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அதிகாரியான நாடாளுமன்ற செயலாளரிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு அளித்தார். இந்த நிகழ்வில் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன், கூட்டணிக் கட்சி எம்.பி.க்களும் பங்கேற்றனர். இவரை எதிர்த்து இந்திய கூட்டணி சார்பில், ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.