துணைவேந்தர்கள் நியமன மசோதா தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு டிச.2க்கு ஒத்திவைப்பு..!!
சென்னை: துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசு நியமிக்கும் சட்டம் தொடர்பான வழக்கு டிசம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலதாமதம் செய்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே தனது தனி அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மசோதாக்களுக்கு எதிராக, தொடரப்பட்ட வழக்கை அவசர அவசரமாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம். தமிழ்நாடு அரசின் வாதத்தை முழுமையாக கேட்காமல் துணை வேந்தர்கள் நியமன சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குடியரசுத் தலைவர் கேள்வி வழக்கில் முடிவு வெளியான பிறகு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் இந்த வழக்கத்திற்கும் குடியரசுத் தலைவர் கேள்வி வழக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தனர். பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்துள்ளது.
இதனால் 14 பல்கலைக்கழங்களில் துணைவேந்தர்களை நியமிக்க முடியவில்லை என்று வாதித்தார். எனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் தடையே உடனடியாக நீக்கி உத்தரவிட வேண்டும் என்று வாதங்களை வில்சன் முன்வைத்தார். மேலும் சில வழக்குகளில் தமிழ்நாடு அரசின் வாதங்களை கேட்காமலேயே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் வில்சன் தெரிவித்தார். இதனை தொடர்ந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.