அதிரும் களம்
பீகார் சட்டப்பேரவைக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் களம் அதிர்ந்து போய் இருக்கிறது. அக்டோபரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நவம்பர், டிசம்பரில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் பீகார் வாக்காளர் பட்டியலில் மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்கு முடிந்த பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அதற்குள் பீகார் களம் சூடுபிடித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் மிக நீண்ட காலம் முதல்வராக பதவி ஏற்றவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா சின்கா. நாடு சுதந்திரம் பெற்றது முதல் தொடங்கி 17 வருடம் 51 நாட்கள் பதவியில் இருந்துள்ளார். தொடர்ந்து 14 ஆண்டுகள் 314 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார். அவரது சாதனையை வீழ்த்தி விட்டார் தற்போதைய பீகார் முதல்வர் நிதிஷ்குமார். 18 ஆண்டுகள் 351 நாட்கள் பீகார் முதல்வராக பதவியில் இருந்து வருகிறார். அதிலும் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் 205 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார். இடையில் ஜித்தன் ராம் மஞ்சிக்கு 288 நாட்கள் முதல்வர் பதவி கொடுத்தார். இல்லை என்றால் இந்த 18 ஆண்டுகளும் தொடர்ச்சியாக முதல்வர் பதவியில் இருந்த சாதனையை நிதிஷ் படைத்து இருப்பார்.
பீகார் அரசியல் வரலாற்றில் நிதிஷ்குமாரை போல் நீண்ட காலம் முதல்வர் பதவியில் இருந்தவர் யாரும் கிடையாது. ஆனால் வரும் சட்டப்பேரவை தேர்தல் நிதிஷ்குமாருக்கு அவ்வளவு எளிது கிடையாது. இருப்பினும் கூட்டணி கட்சியான பா.ஜவை நம்பி தைரியமாக களம் இறங்கியிருக்கிறார். எப்படியாவது பா.ஜ தன்னை கரை சேர்த்து விடும் என்பது அவரது நம்பிக்கை. சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கும் அவர் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதும், குறைந்தபட்சம் பீகார் வாக்காளர் நலன் கருதி, தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு ஒரு அறிக்கை கூட விடாமல் இருப்பதில் இருந்து இந்த உண்மை விளங்கும். மறுபுறம் இந்தியா கூட்டணி.
சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக ராகுல்காந்தி மிகப்பெரிய யாத்திரை நடத்தி முடித்து விட்டார். பீகார் மாநிலத்தின் 25 மாவட்டங்கள் வழியாக சென்ற இந்த யாத்திரையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பலர் பங்கேற்று பலம் சேர்த்துள்ளனர். இனி தொகுதிப்பங்கீடு நடத்த வேண்டும். இங்குதான் இரு கூட்டணியிலும் இழுபறி. காங்கிரஸ் கடந்த தேர்தலை போல 70 தொகுதி கேட்கிறது. ஆனால் 19 தொகுதிகளில் தான் கடந்த முறை வென்றதால் ஆட்சியை பிடிக்க முடியாமல் போன அதிருப்தி லாலு தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு உள்ளது. இந்த இழுபறியில் பீகார் முதல்வர் வேட்பாளர் லாலு மகன் தேஜஸ்வி தான் என்று வெளிப்படையாக அறிவிக்காமல் போக்கு காட்டுகிறது காங்கிரஸ். அதே போல் கம்யூனிஸ்ட்டுகளும் கூடுதல் தொகுதி கேட்கிறார்கள்.
கையை பிசைந்தபடி நிற்கிறார் தேஜஸ்வி. மறுபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமாருக்கும் சிக்கல் இருக்கிறது. ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வான் 40 தொகுதி கேட்கிறார். ஆனால் பா.ஜ 25 தொகுதிதான் என்கிறது. இன்னொரு ஒன்றிய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியும் அதிக தொகுதிகள் கேட்கிறார். இரு கூட்டணிக்குள் தொகுதி ஒதுக்கீடு பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. இதை எல்லாம் தாண்டி தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரும் தனி ஆவர்த்தனம் நடத்தி வருகிறார். நாட்கள் நெருங்க, நெருங்க பீகார் தேர்தல் களம் அதிரடியாக மாறியிருக்கிறது.