வேட்டவலம் அரசு பள்ளி மாணவிகள் தடகள விளையாட்டு போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்
கீழ்பென்னாத்தூர் : வட்ட அளவிலான தடகள போட்டிகளில் வேட்டவலம் அரசு பள்ளி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.கீழ்பென்னாத்தூர் வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கடந்த வாரம் நடந்தது. இப்போட்டிகளில் சுமார் 55 பள்ளிகளில் இருந்து 465 மாணவிகள் கலந்து கொண்டனர். வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 33 மாணவிகள் 3 பிரிவுகளில் கலந்து கொண்டனர்.
14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், 4X100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம், 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தத்தி தாண்டுதல், கோலுன்றி தாண்டுதல், 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், தடை தாண்டி ஓடும் ஓட்டப்பந்தயம், 4X100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம் ஆகியவற்றில் பல்வேறு நிலைகளில் இப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர்.
அதேபோல், 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், கோலுன்றி தாண்டுதல், 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் தடை தாண்டி ஓடும் ஓட்டப்பந்தயம், 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் ஓட்டப்பந்தயம், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், மும்முறை தத்தி தாண்டுதல், 4X100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம் ஆகியவற்றில் இப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர்.
இப்பள்ளியின் வஸ்மிகா என்ற மாணவி 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார். மொத்தமாக 140 புள்ளிகள் பெற்று வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் அனுராதா, உதவி தலைமை ஆசிரியர்கள் செந்தில், அபிராமி, உடற்கல்வி ஆசிரியர் னிவாசன் மற்றும் இருபால் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் சக மாணவிகள் பாராட்டினர்.