வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்!
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரிலிருந்து மதுரை செல்லும் சாலையில் 15 கி.மீ.,துாரத்தில் உள்ளது. மதுரையிலிருந்து 51 கி.மீ தொலைவில் மதுரை - மேலூா் - திருப்பத்தூா் சாலையில் அமைந்துள்ளது. இது சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூா் தாலுக்காவிலுள்ள வேட்டங்குடிப்பட்டி மற்றும் பெரிய கொள்ளுக்குடிப்பட்டியில் அமைந்துள்ளது.
இந்த வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் 40 ஹெக்டேர்பரப்பளவில் வேட்டங்குடி, பெரிய கொள்ளுக்குடி மற்றும் சின்ன கொள்ளுக்குடி என்ற ஊர்களின் நீர்நிலைகளை உள்ளடக்கியது. இந்த சரணாலயம் குளிர் காலங்களில் இடம் பெயரும் பறவைகளுக்கான இயற்கை வாழ்விடமாகும். இடம்பெயர்வுப் பறவைகள் முதன்மையாகக் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்வதற்காக இந்த சரணாலயத்திற்கு வருகின்றன.இவற்றில் உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, இரவு நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை போன்ற சுமார் 217 வகையான 8,000 வெளிநாட்டுப் பறவைகள் மழைக்காலத்தில் இங்கு அடைகாத்தலுக்கு ஏற்ற பாதுகாப்பான இடமாக உள்ளது. இந்தச் சரணாலயம் செல்வதற்கு உகந்த காலம் நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலம். அப்போது நிலவும் இதமான தட்பவெப்ப நிலை ஆயிரக்கணக்கான பறவைகளை அங்கு ஈர்க்கிறது. இந்தப் பறவைகளில் பல ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து இந்த சரணாலயத்தை வந்தடைகின்றன. வேட்டையாடுபவர்களிடமிருந்து பறவைகளைப் பாதுகாக்க, வனத்துறை வேட்டையாடுதல் தடுப்புக் கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளது. கூடுதலாக, அவர்கள் தேவையற்ற மரங்களையும் புதர்களையும் அகற்றி, வாழ்விடத்தை மேம்படுத்த பூர்வீக நாட்டு கருவேலம் மரங்களை நட்டுள்ளனர்.
உள்ளூர் கிராமவாசிகள் இந்தப் பறவைகளின் வருகை பருவமழையின் தீவிரத்தை சுட்டிக்காட்டுவதாக நம்புகிறார்கள். இந்தப் பறவைகள் மழைக்காலத்தைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன. அவை தாழ்வான பகுதிகளில் கூடு கட்டினால், அது லேசான மழையைக் குறிக்கிறது. அதே சமயம் உயரமான நிலப்பரப்பில் கூடு கட்டுவது கனமழையைக் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது.