கால்நடை மருத்துவ படிப்புக்கு வரும் 22ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்
இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. இதுபோக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.
பிவிஎஸ்சி - ஏஎச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2025-26ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் https://adm.tanuvas.ac.in ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 26ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரை நடந்தது. இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 14ம் தேதி வெளியானது. இதில் பி.வி.எஸ்சி. - ஏ.எச் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் 6 பேர் கட்-ஆப் மதிப்பெண் 200க்கு 200 பெற்று முன்னிலை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: “பி.வி.எஸ்சி. - ஏ.எச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள்) கலந்தாய்வு வரும் 22ம் தேதி நடக்கிறது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுகள் அனைத்தும் நேரடியாக சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே வரவேண்டும். பி.வி.எஸ்சி. - ஏ.எச் படிப்புக்கு பொதுப்பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு www.adm.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் நடைபெற இருக்கிறது. அதற்கான பதிவு மற்றும் கல்லூரி வளாக விருப்பத்தை ஜூலை 21ம் தேதி (நாளை) முதல் 24ம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். இடஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீட்டுக்கான ஆணைகள் ஜூலை 26ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.