தமிழ்நாட்டில் 2 இடங்களில் மிக கனமழையும் 5 இடங்களில் கனமழையும் பதிவு: வானிலை மையம்!
சென்னை: தமிழ்நாட்டில் 2 இடங்களில் மிக கனமழையும் 5 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக சமீபத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மட்டுமே வலுப்பெற்றது. அதேநேரம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையவில்லை. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்த போதிலும் பெரிய அளவில் மழை என்பது இல்லை.
இதனிடையே வலு குறைந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியதால் மழைப்பொழிவு என்பது குறைந்தது. இதைத்தொடர்ந்து, வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. ஆழ்கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நேற்று காலையில் மழை பெய்தது. அதன் பிறகு வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 2 இடங்களில் மிக கனமழையும் 5 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் ஊத்து 12 செ.மீ., காக்காச்சி 10 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மாஞ்சோலை 8 செ.மீ., காட்பாடி, வளவனூரில் தலா 7 செ.மீ., சென்னை மேடவாக்கம் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோலியனூர், குமரி சிற்றாறு, ஒக்கியம் துரைப்பாக்கத்தில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது.