சாதகமாக தீர்ப்பு வராவிட்டால் நீதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புவதா?: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை
புதுடெல்லி: சமீபத்தில் தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதி மோசுமி பாத்தாச்சாரியா கையாண்ட வழக்கில் தொடர்புடைய மனுதாரரான வழக்கறிஞர், நீதிபதிக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,‘‘வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்பதற்காக நீதிபதிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்கும் நடைமுறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது வேதனையாக இருக்கிறது. இதுபோன்ற விஷயங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
மேலும் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்த நபர்கள் மன்னிப்பு கோரியதை, சம்பந்தப்பட்ட நீதிபதியும் ஏற்றுக் கொண்டதால், இந்த விவகாரத்தில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவது கிடையாது. காரணம் சட்டத்தின் மகத்துவம் என்பது தண்டனையில் கிடையாது. மாறாக செய்த தவறுக்கான மன்னிப்பை கேட்கும் போது அந்த மன்னிப்பை ஏற்பதில் தான் இருக்கிறது. இருப்பினும் எதிர்காலத்தில் இவர்கள் இதேபோன்ற தவறை தொடர்ந்து செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.