தென்னகத்து திருப்பதி என்றழைக்கப்படும் கருங்குளம் வெங்கடாசலபதி கோயில் மலைப்பாதை சாலை சீரமைக்கப்படுமா?
*பக்தர்கள் எதிர்பார்ப்பு
செய்துங்கநல்லூர் : ‘தென்னகத்து திருப்பதி’ என்றழைக்கப்படும் கருங்குளம் வெங்கடாசலபதி கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை சாலை சேதமடைந்திருப்பதால் பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். எனவே, மலைப்பாதை சாலையை சீரமைக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை- திருச்செந்தூர் வழித்தடத்தில் கருங்குளம் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வகுளகிரி என்றழைக்கப்படும் மலை மேல் பழமையான மற்றும் பிரசித்திப்பெற்ற வெங்கடாசலபதி கோயில் அமைந்துள்ளது.
இங்குள்ள மூலவர் பெருமாள் சந்தனக்கட்டை வடிவில் காட்சியளிக்கிறார். திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் தென்னகத்து திருப்பதியாக உள்ள கருங்குளம் வெங்கடாசலபதி கோயிலில் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கருங்குளத்தில் சிறிய மலை மேல் அமைந்துள்ள வெங்கடாசலபதி சுவாமியை தரிசிக்க பாறைகளில் அமைக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளில் பக்தர்கள் சிரமத்துடன் மேலே ஏறி வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இதனால், படிக்கட்டுகளில் வயது முதிர்ந்தோர் வந்து செல்ல ஏதுவாக இருபுறமும் கைப்பிடி அமைக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக கோயிலுக்கு பின் பகுதியில் வகுளகிரி குன்றின் மீது சாலை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் தென் திருப்பதி என்று அழைக்கப்படுவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தினமும் இங்கு வந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் சித்ரா பவுர்ணமி திருவிழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் மலைப்பாதையை பயன்படுத்துவது வழக்கம்.
இந்நிலையில் மலைப்பாதை சாலை மழையினாலும், முறையான பராமரிப்பு இல்லாததாலும் சேதமடைந்து மேடு பள்ளங்களாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் பக்தர்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. குறிப்பாக, வயதானவர்களும் குழந்தைகளும் மலைக்கோயிலுக்குச் செல்ல சிரமப்படுகின்றனர்.
இதேபோன்று மலைப்பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. இங்கு வாழும் மக்களும் சேதமடைந்த நிலையில் உள்ள சாலையில் வாகனங்களில் சென்று வரும் நிலையில் சாலையை சீரமைக்க வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே கருங்குளம் வெங்கடாசலபதி கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை சாலையின் நிலை குறித்து ஆய்வு செய்து பக்தர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் விதமாக சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைத்து தரமான தார்ச்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.