நாவலர் - செழியன் அறக்கட்டளை சார்பில் சென்னை விஐடி பல்கலையில் நெடுமாறன், கரண்சிங்குக்கு விருது: வெங்கய்யா நாயுடு வழங்கினார்
சென்னை: சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் நாவலர் - செழியன் அறக்கட்டளை மற்றும் விஐடி சென்னை இணைந்து, நாவலர் மற்றும் இரா.செழியன் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடத்தின. விழாவுக்கு, விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பங்கேற்று, ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கரண் சிங்கிற்கு இரா.செழியன் விருதையும், உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனுக்கு டாக்டர் நாவலர் விருதையும் வழங்கி கவுரவித்தார்.
பிறகு வெங்கய்யா நாயுடு பேசியதாவது: கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கல்வியை மட்டும் கற்பிக்க கூடாது. அவர்களுக்கு நமது கலாச்சாரத்தையும் கற்பிக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் தங்களுடைய வாழ்வில் நாகரிகத்துடன் வாழ்வார்கள். இன்றைய இளைஞர்கள் நேர்மறையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்க வேண்டும்.
அதுதான் நாட்டின் வளர்ச்சிக்கு தேவை, சமூகத்தின் ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கும் உயர்தர கல்வி கிடைக்க வேண்டும், இந்தியா இப்போது 4வது பெரிய பொருளாதார நாடாக திகழ்கிறது. 3வது இடத்தையும் அடைவோம். ஆனால், இன்னும் 18 சதவீதம் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். 18 முதல் 20 சதவீதம் மக்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக உள்ளனர். இது நம் அனைவருக்கு முன்னால் உள்ள ஒரு பெரிய சவாலாகும். இந்தியா ஒரு ஜனநாயக சுதந்திர நாடு. நமக்கு நாகரிக மதிப்புகள் உள்ளன. நாம் எந்த நாட்டையும் தாக்கியதில்லை. உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்று தான் இந்தியா நம்புகிறது. எனவே, அமெரிக்கா வரியை எவ்வளவு விதித்தாலும், நாம் யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம் என்றார். விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசுகையில், ‘‘அரசியலில் நாவலர் முன்னுதாரணமாக திகழ்ந்தார். எளிமை, தூய்மை, கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரராக விளங்கினார்.
பாரதிதாசன் பாடல்களை தமிழ்நாடு முழுவதும் கேட்க வைத்தவர் நாவலர்தான். இரா.செழியன் ஆளும்கட்சி, எதிர்கட்சி என அனைத்து தரப்பினராலும் மதிக்கப்பட்டவராக திகழ்ந்தார். இருவரும் பொதுவாழ்வில் தூய்மையை கடைபிடித்தனர். இன்றைய தலைமுறையினர் அவர்களுடைய வாழ்வியலை பின்பற்ற வேண்டும். இந்தியாவின் தெற்கு பகுதியை சேர்ந்த ஒருவர் எப்போதும் குடியரசு தலைவர் அல்லது துணை குடியரசு தலைவராக இருப்பார். ஆனால், வெங்கய்யா நாயுடுக்கு பிறகு யாரும் அந்த பதவிக்கு வரவில்லை. வரவிருக்கும் துணை குடியரசு தலைவர் தேர்தலில் தெற்கு பகுதியை சேர்ந்த ஒருவர் வருவார் என்று நம்புகிறேன்’’ என்றார். விழாவில், நாவலர் - செழியன் அறக்கட்டளையின் உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, நாவலர் சகோதரி விமலா சுப்பையா, ஜெம் கிரானைட் குழுமத்தின் தலைவர் வீரமணி, இதய நல மருத்துவர் ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.