வேலூர் கோட்டைக்கு வந்துள்ள முதல் பிரதமர் மோடி: வேலூர் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் புகழாரம்
வேலூர்: வேலூர் கோட்டைக்கு வந்துள்ள முதல் பிரதமர் மோடி என வேலூர் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் புகழாரம் சூட்டியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி வேலூர் வந்துள்ளார். வேலூர் கோட்டை மைதானத்திற்கு வந்த பிரதமர் மோடியை பாஜக தொண்டர்கள் கோஷம் எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர். பிரதமர் மோடி தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்தார். பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கி, பொன்னாடை அணிவித்து, செங்கோல் கொடுத்து புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கௌரவித்தார்.
வேலூர் பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வரவேற்பு அளித்தனர். தொண்டர்களை பார்த்து தலை தாழ்த்தி பிரதமர் மோடி வணக்கம் சொன்னார். இதையடுத்து, பிரதமர் மோடியை வரவேற்று வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பேசினார். அப்போது பேசிய அவர், வேலூர் கோட்டைக்கு வந்துள்ள முதல் பிரதமர் மோடி. உலக நாடுகளின் பிரச்சினையை தீர்க்க பிரதமர் மோடி உதவுகிறார்.
இந்திய போர் தளவாடங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய போர் தளவாடங்கள் ஏற்றுமதிக்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி என குறிப்பிட்டார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் எனவும் தெரிவித்தார். தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா, அரக்கோணம் பாமக வேட்பாளர் பாலு உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மேடையில் உள்ளனர்.