வேலூர் மாநகராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேயர் ஆய்வு: சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தல்
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதலே லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து நள்ளிரவு முதல் விடிய விடிய மிதமானது முதல் பலத்த மழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது. இந்நிலையில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சேண்பாக்கம் பெரியார் நகர், படவேட்டம்மன் கோயில் தெரு, கன்சால்பேட்டை, இந்திரா நகர் ஆகிய இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து இன்று காலை மேயர் சுஜாதா அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, உடனடியாக ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீரை கால்வாய்களுக்கு செல்லும் வகையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டார்.
இதேபோல் சேண்பாக்கம் சர்வீஸ் சாலையில் தேங்கி இருந்த மழைநீரை அகற்றும் பணியை ஆய்வு செய்தார். மேலும் மழைநீர் செல்லும் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மழை பாதிப்பு சீரமைப்பு பணிகளை உடனுக்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது சுகாதார அலுவலர் முருகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.