வேலூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் எம்.பி நியமனம்
சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக இல.பத்மநாபன் அந்த பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து இல.பத்மநாபன், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக, கே.ஈஸ்வரசாமி எம்.பி., திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மற்றொரு அறிவிப்பு: திமுக நிர்வாக வசதிக்காகவும்-கட்சி பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் வேலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு, வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு ஆகிய இரண்டு மாவட்ட கழகங்களாக பிரிக்கப்படுகிறது.
அவ்வாறு பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். வேலூர் தெற்கு மாவட்டம் (வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகள்) திமுக பொறுப்பாளராக ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் வடக்கு மாவட்டம் (காட்பாடி, கீழ்வைத்தியாணான்குப்பம் சட்டமன்ற தொகுதிகள்) திமுக பொறுப்பாளராக டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வேலூர் வடக்கு மாவட்டம் திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.