வேலூரில் பரபரப்பு கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
*போலீசார் விசாரணை
வேலூர் : வேலூர், கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை ஒரு பெண் வந்தார். அவர் கலெக்டர் அலுவலக ‘ஏ’ பிளாக் போர்டிகோவில் நின்று கொண்டு திடீரென தான் எடுத்து வந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இதை பார்த்து உடனடியாக விரைந்து சென்று தீக்குளிப்பு முயற்சியை தடுத்து, அவரை மீட்டனர்.
இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் மற்றும் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் வேலூர் கன்சால்பேட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி (57) என்பதும், அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் ஆபாசமாக போட்டோ, வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு ரூ.1 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:
ராஜேஸ்வரியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டினாராம். இதுகுறித்து ஏற்கனவே வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரி புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்ததில், இது உண்மை இல்லை என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரது மகனை அழைத்து விசாரித்ததில், தனது அம்மாவுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் இதற்காக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதாகவும், யாரும் மிரட்டி பணம் கேட்கவில்லை எனவும் தெரிவித்தார். இருப்பினும் இதுதொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
ராஜேஸ்வரியை அவரது மகனுடன் அனுப்பி வைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையில், தீ குளிக்க முயன்ற பெண் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலக அதிகாரிகள் போலீசாருக்கு அறிவுறுத்தினர்.