நாகையில் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான மண்டபத்தின் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய த.வெ.க.வினர் வழக்குப் பதிவு
நாகை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தை மேற்கொண்டார். குறிப்பாக நேற்று நாகூர் இருக்க கூடிய வாஞ்சூர் ரவுண்டானாவில் இருந்து வடகுடி பிரிவு சாலை வழியாக நாகை புத்தூர் அண்ணாசிலையை வந்தடைந்து பிரச்சாரத்தை மேற்கொள்வார் என தவெக சார்பாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் வருவதில் காலையில் இருந்து கடும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் வாஞ்சூர் ரவுண்டான அருகே காத்திருந்த ஆயிரகணக்கான தொண்டர்கள் மீண்டும் புத்தூர் பகுதிக்கு வந்திருந்தனர்.
இந்த சூழலில் புத்தூர் ரவுண்டானா பகுதிக்கு அவர் வருவதற்கு சுமார் 3 மணி நேரம் காலதாமதமானது. காவல்துறையினர் 12.25 மணிக்கு அவர் வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. காவல்துறை வழங்கிய நேரத்தை கடந்து சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகே பிரச்சாரம் மேற்கொள்ள கூடிய புத்தூர் அண்ணாசிலை பகுதிக்கு வந்து சேர்ந்தார். காவல்துறையினர் சுமார் 30 நிமிடம் பேசுவதற்கு அனுமதி அளித்திருந்தனர். ஆனால் விஜய் சுமார் 15 நிமிடத்தில் தனது பேச்டை முடித்தார்.
இந்த நிலையில் புத்தூர் அண்ணாசிலை பகுதியில் விஜயை காண வந்திருந்த அந்த கட்சி தொண்டர்கள் ஆயிரகணக்கானோர் அங்கு குவிந்திருந்தனர். காவல்துறையினர், நீதிமன்றம் விதித்த விதிகளை மீறி அங்கிருந்த உயர்மட்ட கோபுரங்கள் மற்றும் கட்டிடங்கள் மீது விஜயை பார்க்க முயன்றனர். மேலும் மிகவும் ஆபத்தான முறையில் அங்கிருக்க கூடிய மின் கம்பங்கள், மரங்கள், விளம்பர பதாகைகள் மீதும் தொண்டர்கள் ஏறினார்கள்.
அப்போது அருகாமையில் இருந்த வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான மண்டபத்தின் சுற்றுச்சுவர் மீது நூற்றுக்கனக்கான தொண்டர்கள் அமர்ந்து விஜய் பேசுவதை கேட்டுகொண்டிருந்தனர். அதனால் சுற்றுசுவர் மட்டுமின்றி அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளும் அடியோடு சாய்ந்தது. இதில் ஒரு சிலருக்கு காயமும் ஏற்பட்டது.
இந்த நிலையில் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும், காவல்துறையினர் கொடுத்த 20 நிபந்தனைகளை மீறியதாகவும் த.வெ.க.வினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகை நகர காவல்நிலையத்தில் மாவட்ட செயலாளர் சுகுமாரன், சேகர் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பில் இருக்க கூடிய நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.