மலைப்பாதை புதுப்பிக்கப்படுவதால் திருத்தணி முருகன் கோயிலுக்கு வாகனங்கள் செல்ல 2 நாள் தடை
திருத்தணி: திருத்தணி முருகன் திருக்கோயில் நிதியில் ரூ.1 கோடி மதிப்பில் மலைப்பாதையில் தார்சாலை புதுப்பிக்கும் பணிகள் இன்று முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் மலைப்பாதையில் வாகனங்கள் செல்வதற்கு 2 நாள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து முதியோர் மற்றும் குழந்தைகள் மலைக்கோயிலுக்கு சென்றுவர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. முருகனின் அறுபடை வீடுகளில் 5ம் படை வீடான திருத்தணி முருகன் திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
இங்கு இருசக்கர வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் வருபவர்கள் மலைப்பாதை வழியாக கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். இதனால் மலைக்கோயிலுக்கு செல்லும் சாலையில் ஆங்காங்கே சேதமடைந்து உள்ளன. இதனால் மலைப்பாதை வழியாக பக்தர்கள் கோயிலுக்கு சென்றுவர வசதியாக, மலைப்பாதை சாலையை சீரமைக்க திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, திருத்தணி முருகன் கோயில் நிதியில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்து, மலையடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்லும் 1370 மீட்டர் நீளம் கொண்ட தார்சாலையை புதுப்பிக்கும் பணி இன்று முதல் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை தொடர்ந்து, மலைப்பாதையில் வாகனங்கள் சென்று வருவதற்கு 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் மலை படிக்கட்டுகள் வழியாக நடந்து சென்று சாமி தரிசனம் செய்யும்படி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், மலைக்கோயிலுக்கு வரும் முதியோர், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதியாக, மலைப்பாதையில் கோயில் பஸ் இயக்கப்படுவதாகவும் அதில் அவர்கள் பயணித்து சாமி தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.