வாகனங்களை வழிமறித்து தாக்குதல் மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு 2 பாதுகாப்பு வீரர்கள் பலி: ஏராளமான வீரர்கள் காயம்
நம்போல்: மணிப்பூர் மாநிலத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் பலியானார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் இன வன்முறையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அங்கு பிரதமர் மோடி சமீபத்தில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இருப்பினும் அங்கு இன்று வரை வன்முறை குறையவில்லை.
பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நம்போல் சபால் லெய்கை அருகே நேற்று மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அசாம் ரைபிள்ஸ் படையினர் 33 பேர் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படையினர் 2 பேர் கொல்லப்பட்டனர். பல வீரர்கள் காயமடைந்தனர். அசாம் ரைபிள்ஸ் படையினர் வாகனங்களில் இம்பாலில் இருந்து பிஷ்ணுபூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மாலை 5.50 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்தது.
வாகனங்களை சுற்றி வளைத்து மர்ம கும்பல் சரமாரியாக துப்பாகிச்சூடு நடத்தியது தெரிய வந்துள்ளது. இதில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளார். மணிப்பூர் முன்னாள் முதல்வர் என் பிரேன் சிங் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். அவர் கூறுகையில்,’ வீரர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆறுதல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ’ என்று குறிப்பிட்டுள்ளார்.