தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காய்கறி, பூக்கள், கீரைகள்... விதை சேகரிப்பில் கைநிறைய காசு பார்க்கும் இல்லத்தரசி!

``முதல்ல வீட்டுத் தேவைக்கு காய்கறிகள் பயிரிட்டோம். அப்றமா பூக்கள், மஞ்சள் என சாகுபடியை விரிவுபடுத்தினேன். இப்போ பலவகை பூக்கள், காய்கறிகளை பயிரிட்டு விதைகளை உற்பத்தி செஞ்சு விற்கிறேன்” என பேச ஆரம்பித்தார் லாவண்யா. சேலம் மாவட்டம், ஓமலூர் காடையம்பட்டி பகுதியில் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இவர் பல்வேறு நாட்டு ரக காய்கறிகள், பூக்கள், கீரை ஆகியவற்றை விளைவித்து, விதைகளை சேகரித்து விற்பனை செய்து வருகிறார். அதில் கணிசமான லாபத்தையும் பார்த்து வருகிறார். இதுகுறித்து அறிந்து ஒரு காலைப்பொழுதில் லாவண்யாவை சந்தித்தோம். “எங்க குடும்பத்துல இயற்கையா விளைஞ்ச காய்கறிகளை சாப்பிடணும்னுதான் முதலில் காய்கறிகளை பயிரிட்டேன். அழகுக்காக பூச்செடி களையும் வச்சோம். இதுக்கு முதல்படியா மண்ணைத் திருத்தி, பலதானியம் விதைச்சி, 60 நாட்களுக்குப் பிறகு மடக்கி உழுதோம். அப்புறம் 20 நாள் கழிச்சி, சங்குப்பூ, காசித்தும்பை, தேன்பூச்சிகள் அதிகமா கவரக்கூடிய காஸ்மோஸ்னு பூ வகைகளும், கத்தரி, வெண்டை, பீர்க்கன் மாதிரியா காய்கறிகளும் போட்டோம். ஊட்டத்துக்கு மீன் அமிலம் குடுத்தோம். பல பூ ரகங்களை சேகரிக்க ஒரு வருஷம் ஆச்சு. தமிழ்நாடு மட்டுமில்லாம மத்த மாநிலங்கள்ல இருந்தும் நண்பர்கள், விதை சேகரிப்பாளர்கள் மூலமா விதைப்பரிமாற்றம் செஞ்சு பலரக விதைகளை வாங்குறோம். அதுல நம்ம மண்ணுக்கு நல்லா வளர்றத தேர்ந்தெடுத்தேன். அதையும் ரசாயனம் கலக்காம இயற்கையா பண்ணனும்னு நினைச்சேன். முழுமையா இயற்கை விவசாயத்துக்கு மாற எங்களுக்கு ரெண்டு வருசம் ஆச்சு” என்றவர், மேலும் தொடர்ந்தார்.

Advertisement

``சங்குப்பூக்களை 5 சென்ட் நிலத்துல 7 நிறங்கள்ல வச்சிருக்கோம். இது விதைச்சு 10 நாள்லயே முளைக்கும். ஒரு மாசத்துலயே கொடி படர்ந்து பூக்கும். இது எல்லா மாசத்துலயும் பூக்கும். மூனு மாசத்துலயே விதைகள் எடுக்குற அளவுக்கு வளந்துடும். ஒரு செடி 5 வருஷங்கள் வரை அப்டியே இருக்கும். சாதாரணமா பராமரிச்சாலே போதும். கூடுதலா ஊட்டம் கொடுத்தா அதிகமா பூக்கும். முன்னாடியே ஆர்டர் குடுக்குற சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் நீல சங்குப்பூவை உலர வச்சி குடுக்குறோம். சங்குப்பூவோட காய் அவரைக்காய் மாதிரி இருக்கும். இந்தக் காய் செடியிலயே காய்ந்த பிறகு பறிச்சி விதைகளை எடுக்கறோம். பால்கன் பூ என்று ஒரு பூ இருக்கு. இதில் 10 நிறங்கள் இருக்கும். காஸ்மோஸ் பூக்கள் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பார்க்கிங், வீட்டுத்தோட்டங்களில் இதை வளர்க்கறாங்க. 6 அடி வரைக்கும் வளரும். பட்டாம்பூச்சி, தேன்பூச்சிகளை இது அதிகமா ஈர்க்கும். அதனால தோட்டத்துல மகரந்தச் சேர்க்கை அதிகமா நடக்கும். பந்துப்பூ என்கிற செண்டுமல்லியும் வச்சிருக்கோம். இது அழகுக்காகவும், பூச்சிக்கட்டுப்பாட்டுக்கும் பயன்படும். மஞ்சளுக்கு நடுவுல ஊடுபயிரா போட்டிருக்கோம். மழைக்காலத்தில் பூக்கும் ரெய்ன் லில்லி வச்சிருக்கோம். பூச்செடிகள் பொதுவா 4 மாசத்துல காய்க்கும். அந்தக் காய்கள் பழுப்பா மாறினதும் பறிச்சி, விதைகளை எடுத்து, ஈரப்பதம் போறவரைக்கும் வெயில்ல காய வச்சி, புடைத்து சுத்தப்படுத்தி எடுத்து வச்சிக்கறோம்” என பூக்கள் சாகுபடி குறித்து விளக்கினார்.

இவரது தோட்டத்தில் காய்கறிகளும் கீரைகளையும் கூட விளைவிக்கிறார். “நாலஞ்சு மூங்கில் கம்புகளை சேர்த்து வச்சி நட்டு ஒரே பந்தல்ல காராமணி, மூக்குத்தி அவரை, புடலங்காய், பீர்க்கங்காய்ன்னு 4 வகை கொடிகளையும் ஒரே பந்தல்ல ஏத்தி விட்டிருக்கோம். கொடிகள் தரையில படர்ந்தா, காய்கள் மண்ல பட்டு அழுகிடும். அதனால, கொடிகளை கீழ படரவிடாம இருக்கணும். இந்த காய்கறிக்கொடியை 2 சென்ட்ல போட்டிருக்கோம்.பீர்க்கன்காயில் நாட்டுரகம், மயில் பீர்க்கன்னு 5 வகை வச்சிருக்கோம். ஒவ்வொன்னும் தனி சுவையா இருக்கும். பனிக்காலத்துல அதிகமா காய்க்கும். சிறகு அவரையில் 2, தம்பட்டவரையில் 2ன்னு மொத்தமா 17 வகை அவரை விதைகள் இருக்கு. சுரைக்காயில் சின்ன வகை சிட்டு சுரையிலர்ந்து அழகுக்காகவும் தண்ணி பாட்டிலாவும் பயன்படும் தண்ணீர்க்குடுவை சுரை, நீச்சல் சுரை, மத்தாள சுரைன்னு பல வகை இருக்கு. மயில்கழுத்து சுரை, கருஞ்சுரை இதெல்லாம் நல்ல சுவையா இருக்கும். வெண்டைக்காய்ல 10 வெரைட்டி இருக்கு. தக்காளியில் செர்ரி தக்காளி, குடம் தக்காளி, ஒரு தக்காளியே கால் கிலோ வர்ற ரகம்னு 30 வகைகள் வச்சிருக்கோம்.

காய்கறிகள் பொதுவா பிஞ்சு வச்சி ஒரே வாரத்துல பெருசாகிடும். கொடிவகைகளில் முதலில் வளரும் காய்களையும், விளைச்சல் முடியிற நேரத்துல இருக்குற காய்களையும் விதைக்கு பயன்படுத்தக்கூடாது. நடுவுல ஒரு மாசத்துல காய்க்கிற காய்களை விதைக்கு பயன்படுத்தலாம். காய்கள் காஞ்சதும் விதைக்கு பறிக்கணும். 5 சென்ட் அளவுக்கு மஞ்சள் போட்டிருக்கோம். நம்ம சேலம், ஈரோடு பகுதியில நல்லா விளையும் நாட்டு ரக மஞ்சள் வச்சிருக்கோம். மண்ணை சமப்படுத்தி, மேட்டுப்பாத்தி அமைச்சி நடவு செஞ்சிட்டா ஒரு மாசத்துல முளைக்க ஆரம்பிச்சிடும். பூச்சித்தாக்குதலில் இருந்து காக்க மண்ணுக்கும் செடிக்கும் வேப்பங்கொட்டை கரைசல் தெளிக்கலாம். பிப்ரவரி, மார்ச்ல அறுவடை பண்ணலாம். உணவுக்குப் பயன்படுத்தும் மஞ்சள், அழகுக்கு கஸ்தூரி மஞ்சள், மருத்துவத்துக்குப் பயன்படுத்தக்கூடிய அரியவகை கருமஞ்சள், ஊறுகாய் போடும் மாஇஞ்சின்னு 4 வகை மஞ்சள் வச்சிருக்கோம்.

கீரைகளும் போட்டிருக்கோம். தண்டுக்கீரை, முளைக்கீரை, பசலைக்கீரை, மயில் தண்டுக்கீரை, ஆறடி வரைக்கும் வளரும் கோல்ட்ன் கீரை, சொடக் குத்தக்காளி, அரிதான சிவப்பு மணத்தக்காளி வச்சிருக்கோம். கீரைகளை ஒரு மாசத்துலயே பறிச்சிடலாம். மழைகாலத்துல மட்டும் செடிகள் அழுகிடாம பாத்துக்கணும். கீரையையும் நாங்க சாப்பிடவும், விதைக்காகவும் வளக்கறோம்.

இங்க இருக்குற செடிகள் பெரும்பாலும் சின்னச்சின்ன செடிகளா இருக்குறதால, நானே களைகளை கையால எடுக்கறேன். விதை எடுக்கறதுக்கு ஒரு நாள், சுத்தப்படுத்தி காயவைக்கிறதுக்கு 3 நாள்னு வாரம் முழுக்க வேலை இருக்கும். வேலையாட்கள் வைக்காம நானே இந்த வேலையை எல்லாம் செய்றேன். என் கணவரும் உதவுறாரு. எப்பவாவது அதிகமா காத்தடிச்சா பூக்கள் கொட்டிடும். 10 நாள் கழிச்சிதான் மறுபடியும் பூக்கும். காத்தடிக்கிறதால வர்ற பாதிப்பை குறைக்க வேலிப்பயிரா தென்னை, கொடி உருளை, மரவள்ளிக்கிழங்குலாம் வச்சிருக்கோம். காய்களை கண்டுக்காம கீழ விட்டுட்டோம்னா எலிகள் கடிச்சி தின்னுடும். இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டுதான் இந்தத் தொழில்ல  இறங்கணும். உள்ளூர்ல வாய்வழி விளம்பரத்துல விதைகளை வாங்கிக்கறாங்க. இன்ஸ்டாகிராம்ல காந்தி கார்டன் என்கிற பேர்ல பேஜ் வச்சிருக்கோம். அதுலர்ந்தும் வாடிக்கையாளர்கள் கிடைக்கறாங்க. சீசனைப் பொறுத்து வருவாய் மாறும். செலவுன்னு பார்த்தா பந்தலுக்கு மூங்கில் வாங்கி அதையே 3 ஆண்டுகளுக்கு பயன்படுத்திக்கறோம். இயற்கை இடுபொருட்கள் வாங்குறது, பந்தல் செலவு, விதைகளுக்கான செலவுலாம் போக ஒவ்வொரு மாசமும் சராசரியா 30,000 ரூபாய் வருவாய் வரும்” என பெருமிதத்துடன் கூறுகிறார்.

தொடர்புக்கு:

லாவண்யா: 90257 80081.

Advertisement

Related News