ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறி விலை கிடுகிடு
ஒட்டன்சத்திரம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகளுக்கு தேவை அதிகரித்துள்ளதால் ஒட்டன்சந்திரம் சந்தையில் விலை உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி மற்றும் காமராஜர் காய்கறி சந்தை மிகவும் பிரசித்திபெற்றது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு காய்கறி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தவிர கேரளாவுக்கும் கணிசமான அளவில் காய்கறி அனுப்பி வைக்கப்படுகிறது. அம்மாநிலத்தில் வரும் 5ம் தேதி ஓணம் பண்டிகை என்பதாலும், சனிக்கிழமை சந்தைக்கு வார விடுமுறை என்பதாலும் நேற்று முதலே கேரளாவிற்கு லாரிகளில் காய்கறி மூட்டைகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கை ரூ.20-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளது.
பச்சை மிளகாய் கடந்த வாரம் ரூ.26-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.40 வரை விற்கப்படுகிறது. 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.400க்கும், 22 கிலோ கொண்ட பச்சை கத்திரிக்காய் பெட்டி ரூ.600-க்கும், 10 கிலோ முருங்கை பீன்ஸ் ரூ.600க்கும் விற்கப்படுகிறது. மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் (ஒரு கிலோவில்): மாங்காய் ரூ.85, சின்ன வெங்காயம் ரூ.50, பல்லாரி ரூ.25, வெண்டைக்காய் ரூ.35, அவரை ரூ.30, பூசணி ரூ.22 விலையில் விற்கப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், `கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் காய்கறிகளுக்கு தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. காய்கறி வரத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும், ஓணம் பண்டிகைக்காக கேரளாவிற்கு சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது’ என்றார்.