மதுரை வண்டியூரில் கோலாகலமாக நடந்தது; வீரராகவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு பக்தர்கள் பரவசம்
மதுரை: கோவிந்தா... கோவிந்தா... என கோஷம் முழங்க மதுரை வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இன்று காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் உபகோயிலாக வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயில் திகழ்கிறது. சித்திரை திருவிழாவின்போது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய பின் அன்று இரவு இக்கோயிலில் எழுந்தருளும் சிறப்பு வாய்ந்தது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து திருப்பணிகள் நடைபெற்றன. இதையடுத்து கும்பாபிஷேகத்திற்காக கடந்த அக்.22ம் தேதி வாஸ்து பூஜையுடன் யாகசாலை பூஜை ெதாடங்கியது. தொடர்ந்து இன்று காலை 9.40 மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்தக்குடங்களை பட்டர்கள் தலையில் சுமந்து கோயிலை வலம் வந்தனர்.
பின்னர் கோயில் கோபுரத்திற்கு தீர்த்தக்குடங்கள் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து கோபுரக் கலசங்களில் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலில் உள்ள பெருமாள், தேவியர்கள், கனகவல்லித்தாயார், சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், ஆஞ்சனேயர் ஆகியோரின் சன்னதிகள் மற்றும் நவகிரக சன்னதி உள்ளிட்ட ராஜகோபுரங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் மீது புனிதநீர் தௌிக்கப்பட்டது. கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படனர்.
அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாஜலம், கோயில் துணை ஆணையர் யக்ஞ நாராயணன் மற்றும் அறங்காவலர் குழுவினர் மற்றும் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.