வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகள் சீசன் துவக்கம்: 10 ஆயிரம் பறவைகள் குவிந்தன
மதுராந்தகம்: வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகள் சீசன் துவங்கிய நிலையில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் குவிந்துள்ளன. மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா, சைபீரியா, கனடா, இலங்கை, பர்மா, உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 21 வகையான நத்தை கொத்தி நாரை, கூழைக்கடா, வர்ணனாரை, நீர்காகம், பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், ஊசி வாத்து, நாமகோழி உள்ளிட்ட பறவைகள் சரணாலயத்தில், ஏரியில் உள்ள மரங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்துவிட்டு குஞ்சு பறவைகளுடன் தங்களது சொந்த நாடுகளுக்கு செல்வது வழக்கம். வேடந்தாங்கல் பகுதியில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி சில நாட்களிலேயே கனமழை பெய்ததால் ஏரியில் 10 அடி வரை தண்ணீர் நிரம்பி ஏரியில் உள்ள மரங்களை சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாக பறவைகளுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பல்லாயிரக்கணக்கான நத்தை கொத்தி நாரை, 100க்கும் மேற்பட்ட பாம்பு தாரா, 500மேற்பட்ட கூழைக்கடா, 200க்கும் மேற்பட்ட நீர் காகம், நூற்றுக்கும் மேற்பட்ட வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் தற்பொழுது வந்து தங்கியுள்ளது. இதனால், பறவைகள் சரணாலயம் முழுவதும் பறவைகள் நிறைந்து காட்சியளிக்கிறது. புதிதாக வந்து தங்கியுள்ள நத்தை குத்தி நாரை பறவைகள் ஏரியில் உள்ள செடி கொடிகளை பறித்து கூடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பறவைகளைக் காண ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் பார்வையிட உள்ளதால் சரணாலயத்தில் பராமரிப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது.
நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5, செல்போன் கேமரா கொண்டு செல்ல ரூ.50, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் பெரியவருக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50, கேமரா மற்றும் செல்போன் கொண்டு செல்ல ரூ.500 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த பறவைகள் சரணாலயத்தில் இன்று முதல் பறவைகள் சீசனும் பார்வையாளர்களின் சீசனும் களை கட்டியுள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர் இருப்பினும் வேடந்தாங்கல் பகுதிக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வசதிக்கென சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. நிரம்பிய ஏரி: பருவ மழை தொடங்கியதும் இந்த ஏரிக்கு நீர் வரத்து கால்வாய் வழியாக தண்ணீர் விரைவாக சென்றடைந்தது. ஏரியில் உள்ள மரங்களை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இனப்பெருக்கத்திற்கு வந்த பறவைகள் மரங்களில் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளது.
டைனோசர் பறவை கூழைக்கடா மூதாதைய பறவை
கூழைக்கடா பறவைகள் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவையாகும். இதன் எடை 4.5 முதல் 11 கிலோ வரை இருக்கும். சிறகுகளின் நீளம் 2.7 மீ. மொத்த உயரம் 127 முதல் 182 செ.மீ, அலகு நீளம் 22 செ.மீ ஆக உள்ளது. இதனால் இந்த பறவை டைனோசர் பறவை வகையைச் சார்ந்தது என்று கூறப்படுகிறது. தற்பொழுது இந்த கூழைக்கடா பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஏரியில் 500க்கும் மேற்பட்டவை குவிந்துள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில்கள், கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்கும் விதமாக பறவைகள் சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து வனத்துறையினர் சோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.