‘வடக்கு-தெற்கு’ பிரிவினை பிரசாரம்; வங்கதேசத்தில் இருந்து செயல்பட்ட ‘வி-திராவிடியன்ஸ்’ பக்கம் திடீர் மாயம்: எக்ஸ் தளத்தின் புதிய அறிவிப்பால் அம்பலமான சதி
புதுடெல்லி: சமூக வலைத்தளமான எக்ஸ், கணக்குகள் செயல்படும் நாட்டின் குறியீட்டை வெளியிடும் புதிய அம்சத்தை அறிவித்ததும், பிரிவினைவாத கருத்துகளை பரப்பி வந்த பக்கம் ஒன்று மாயமாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஒன்றான எக்ஸ் (முன்னர் டுவிட்டர்), அதன் பயனர்கள் எந்த நாட்டில் இருந்து தங்கள் கணக்குகளை இயக்குகிறார்கள் என்பதைக் காட்டும் ‘செயல்படும் நாட்டின் அடையாளக்குறி’ (Country of Origin tag) என்ற புதிய அம்சத்தை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, இந்தியர்களுக்கு இடையே ‘வடக்கு-தெற்கு’ என்ற பிரிவினைவாத பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த ‘வி-திராவிடியன்ஸ்’ (@WeDravidians) என்ற சமூக வலைத்தள பக்கம் திடீரென மாயமாகியுள்ளது. இந்தப் பக்கம் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு, மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
மாயமான அந்தப் பக்கம், இந்தியாவில் இருந்து செயல்படவில்லை என்றும், வங்கதேசத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்ததாகவும் தற்போது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இந்தியர்களுக்கு இடையே வடக்கு-தெற்கு என்ற பாகுபாட்டை உருவாக்கி, நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் இந்தப் பக்கம் நீண்ட காலமாக செயல்பட்டு வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எக்ஸ் தளத்தின் புதிய அடையாளக்குறி அம்சம் நடைமுறைக்கு வந்தால், தாங்கள் வங்கதேசத்தில் இருந்து செயல்படுவது அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே, அந்தப் பக்கத்தின் நிர்வாகிகள் அதனை நீக்கிவிட்டுத் தலைமறைவாகி இருக்கலாம் என்று சமூக வலைத்தள பயனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.