சங்கரன்கோவில் அருகே தனிப்பட்டா வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
*விஜிலென்ஸ் அதிரடி
சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் அருகே தனிப்பட்டா வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவை விஜிலென்ஸ் போலீசார் கைது செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் தங்கராஜா (38).
இவரது மாமனார் சண்முகவேலுக்கு நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியூரில் ஒரு ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது. இந்த நிலம் சண்முகவேல் மற்றும் 4 பேரின் பெயர்களில் கூட்டு பட்டாவாக இருப்பதாக தெரிகிறது. ஆனால் அந்த நிலம், அவரது மாமனாருக்கு மட்டும் பாத்தியப்பட்டது என கூறப்படுகிறது.
எனவே கூட்டுப் பட்டாவில் இருந்து தனிப்பட்டா வழங்கக் கோரி சண்முகவேல் மற்றும் தங்கராஜா மனைவி பலமுறை சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்திலும், சங்கரன்கோவில் ஆர்டிஓ அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.
ஆனால் இந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அவரது மாமனாரால் தொடர்ந்து அலைய முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தங்க ராஜா தனிப்பட்டா வாங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக அவரது மாமனார் சண்முகவேலிடம் கூறினார்.
இதையடுத்து அவர் பெரியூர் விஏஓ ராஜ்குமாரை கடந்த செப்.29ம் தேதி சந்தித்துள்ளார். அப்போது தங்களது ஆவணங்கள் சரியாக உள்ளது என்றும், ஆன்லைனில் விண்ணப்பம் செய்யுங்கள் என்று கூறி விட்டு தனிப்பட்டா வழங்க பரிந்துரை செய்வதற்கு ரூ.20 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அவ்வளவு பணம் தர முடியாது எனக்கூறிய தங்கராஜா கொஞ்சம் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு விஏஓ ராஜ்குமார் 10 நாட்களுக்குள் ரூ.15 ஆயிரத்தை தரும்படி கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் தர விரும்பாத தங்கராஜா, இது தொடர்பாக தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுரையின் பேரில் நேற்று பெரியூர் விஏஓ ராஜ்குமாரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை தங்கராஜா வழங்கினார்.
அப்போது அங்கு மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பால்சுதர், ஆய்வாளர் ஜெயஸ்ரீ, உதவி ஆய்வாளர் ரவி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் தெய்வக்கண் ராஜா, வேணுகோபால், பிரபு, கோவிந்தராஜன் மற்றும் போலீசார், விஏஓவை கையும், களவுமாக அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து ராஜ்குமார் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
லஞ்சம் கேட்டால் புகார் தரலாம்
தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இதுபோல் பொதுமக்களிடம் அரசாங்க ஊழியர்கள் லஞ்சமாக பணம் கேட்டால் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கலாம் அந்த புகார் கொடுப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.