வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையிலும் பள்ளத்தால் விபத்து அபாயம்
நெல்லை: வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் சேவை மையம் எதிரே காணப்படும் ராட்சத பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் அவதிப்படும் வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையின் தொடக்கத்தில் தினமும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்தது. அப்பகுதியில் மதுரை, சென்னை செல்லும் அரசு பஸ்களோடு, ஆம்னி பஸ்களும் அணிவகுத்து நின்றதால், பஸ் ஏற வருவோர் திண்டாட்டத்திற்கு உள்ளாயினர், மேலும் ஆம்னி பஸ்கள் அங்கேயே நின்று கொண்டு ஆட்களை ஏற்றுவதால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆம்னி பஸ்களை நிறுத்த வசதியாக வடக்கு பைபாஸ் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டது.
அதன்படி செல்லப்பாண்டியன் பாலம் இறக்கம் தொடங்கி, சிறிது தூரம் சாலை ஓரத்தில் இருந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. மேலும் அப்பகுதியில் நின்றிருந்த மரங்களையும் வெட்டி அகற்றினர். மரங்கள் தோண்டப்பட்ட இடங்களில் குழிகள் பெரியதாக காணப்பட்டன. வெயில் காலத்தில் அப்பள்ளங்கள் தெரியாத நிலையில் இருந்தன. இந்நிலையில் தற்போது மழை பெய்யும் நிலையில், மரத்தை பிடுங்கிய குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது தெரியாமல் இருசக்கர வாகனங்களின் வருவோர் அக்குழிகளில் இறங்கி தவிக்கின்றனர். சேவை மையம் எதிரே காணப்படும் இந்த மெகா பள்ளத்தில் சிலர் வாகனங்களை இறக்கிவிட்டு வெளியேற சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகள் அகற்றிய பகுதிகளில் சாலையை சீரமைத்து தரவேண்டும் என்பது பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.