வாணியம்பாடி மலைக்குன்றில் இருந்து குடியிருப்பு பகுதியில் உருண்டு விழுந்த ராட்சத பாறை
வாணியம்பாடி : வாணியம்பாடியில் மலைக்குன்றில் இருந்து குடியிருப்பு பகுதியில் ராட்சத பாறை உருண்டு வந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்றுமுன்தினம் 4வது நாளாக மழை பெய்தது. இதன்காரணமாக வாணியம்பாடி, செட்டியப்பனூர், கிரிசமுத்திரம், வளையாம்பட்டு, அம்பலூர், கொடையாஞ்சி, திகுவா பாளையம், திம்மாம்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
வாணியம்பாடி
நேதாஜி நகர் பகுதி மில்லத்நகரில் மலைக்குன்று உள்ளது. இதனருகே உள்ள குடியிருப்பு பகுதியில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இங்கு நேற்றுமுன்தினம் இரவு வரை மழைபெய்த நிலையில் குன்றின் மேல் இருந்த ராட்சத பாறை திடீரென சரிந்து குடியிருப்பு பகுதியில் உருண்டு வந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவில் உள்ள பாதை வழியாக ராட்சத பாறை உருண்டு வந்ததால் குடியிருப்பு பகுதியில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
விழுந்த வேகத்தில் குடியிருப்புகளின் மீது மோதியிருந்தால் வீடுகள் இடிந்திருக்கும். ஆனால் தெருபகுதியின் நடுவில் நின்றதால் மக்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். மேலும் அங்கு யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி தாசில்தார் சுதாகர், நகராட்சி ஆணையாளர் ரகுராமன், வாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதிகுமார் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு ராட்சத பாறையை ஜேசிபி மற்றும் இயந்திரங்கள் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.