வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு கொண்டாட்டம் பாஜ சார்பில் வரும் 7, 8ல் விழா: தமிழிசை பேட்டி
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள் தமிழக பாஜ தலைவர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது: வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு கொண்டாடப்பட வேண்டும் என்று சமீபத்தில் நடந்த ‘மன் கி பாத்’ நிகழ்வில் பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்காக நவ.7 மற்றும் 8ம் தேதிகளில் மிகப் பிரம்மாண்டமான விழாக்களை நடத்த இருக்கிறோம். வந்தே மாதரம் அச்சிடப்பட்ட அட்டைகள் வழங்கப்படும். சிறப்பு அழைப்பாளர்கள் இந்த பாடலின் முக்கியத்துவத்தை பற்றி பேசுவார்கள். இசையுடன் கூடிய பாடல் பாடப்படும். பாடலின் முடிவில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுக்கப்படும். இந்த நிகழ்வில் நாங்கள் கட்சிக் கொடியை பயன்படுத்த போவதில்லை. தேசிய கொடியை பயன்படுத்த போகிறோம். அனைத்து கட்சியினரும் கலந்து கொள்ள வேண்டும். திமுகவினரும் கலந்து கொண்டு வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும். கன்னியாகுமரியில் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். சேலத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், செஞ்சி கோட்டையில் சுதாகர் ரெட்டி, சிவகங்கையில் எச்.ராஜா, வேலூரில் நானும் கலந்து கொள்கிறேன். தமிழக அரசும் இதை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.