நாட்டின் முதல் வந்தே பாரத் பார்சல்' ரயில்: ஒரே நேரத்தில் 264 டன் சரக்குகளை ஏற்றலாம்
சென்னை : 'நாட்டின் முதல், 'வந்தே பாரத் பார்சல்' ரயில் தயாராகி விட்டது. ஓரிரு மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும். இதில், ஒரே நேரத்தில், 264 டன் சரக்குகளை ஏற்றிச் செல்லலாம்' என, சென்னை ஐ.சி.எப்., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்டு வரும், 'வந்தே பாரத்' ரயில்களுக்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதே தொழில்நுட்பத்தை கொண்டு, சரக்குகளை எடுத்துச் செல்ல கூடுதல் சிறப்பு அம்சங்களுடன், 'வந்தே பாரத் பார்சல்' ரயில் தயாரிப்பு பணிகள், கடந்த ஓராண்டாக நடந்து வந்தன. ஒட்டுமொத்த தயாரிப்பு பணிகள், தற்போது முடிந்துள்ளன.
மொத்தம், 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயில், மணிக்கு 160 கி.மீ., வேகம் செல்லும் திறன் கொண்டது. உணவு பொருட்கள் பதப்படுத்தும் வசதி, பொருட்களை பாதுகாப்பாக கையாளும் வசதிகள் உள்ளன. இணையவழி வணிக நிறுவனங்கள், தங்களது பொருட்களை அனுப்புவதற்கு, தற்போது பெரிய அளவில் விமான போக்குவரத்தையே நம்பி உள்ளன. அவர்களின் வசதிக்காக, 'வந்தே பாரத் பார்சல்' ரயில் சேவையை துவங்க உள்ளோம்.
முதல் ரயில், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஓடத் துவங்கி விடும். முதல் கட்டமாக, மும்பை, டில்லி மண்டலங்களில் இயக்க திட்டமிட்டுள்ளோம். தனியார் நிறுவனங்கள், தங்களது பொருட்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் எடுத்துச் செல்ல முடியும். முதலில் வருவோருக்கும், நீண்ட கால ஒப்பந்தம் செய்வோருக்கும் சலுகைகள் அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.