வண்டலூர் உயிரியல் பூங்காவில் காணாமல்போன சிங்கத்தின் இருப்பிடம் கண்டுபிடிப்பு!
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் காணாமல்போன சிங்கம் லயன் சபாரி என்ற பகுதியில் இருப்பது டிரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இரவில் வெப்ப இமேஜிங் டிரோன் கேமரா மூலம் தொடர்ந்து 5 பேர் கொண்ட குழு கண்காணித்து வருகிறது. லயன் சபாரி பகுதியில் இருந்து சிங்கம் தானாகவே உணவுக்காக கூண்டுக்கு வந்துவிடும் என பூங்கா நிர்வாகம் தகவல்.
வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், கடந்த 5 நாட்களாக 'ஷெரூ' என்ற ஆண் சிங்கம் காணாமல் போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிங்கம் லயன் சஃபாரி பகுதியில் இருந்து மாயமானது குறித்து மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
5 வயதுடைய சிங்கம், கடந்த புதன்கிழமை காலை 28 ஹெக்டேர் பரப்பளவுள்ள லயன் சஃபாரி பகுதிக்குள் விடப்பட்டது. ஆனால், வழக்கம்போல் மாலை உணவிற்காக அது தனது அடைப்பிடத்திற்குத் திரும்பவில்லை. ஆரம்பத்தில் ஒருசில நாட்கள் சுற்றிய பிறகு சிங்கம் திரும்பி வந்துவிடும் என்று அதிகாரிகள் இருந்த நிலையில், அதன் வருகை இல்லாதது தற்போது பூங்கா நிர்வாகத்திற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது.
சிங்கத்தைக் கண்டுபிடிக்க, மிருகக்காட்சி சாலை நிர்வாகம் அடர்ந்த சஃபாரி வனப்பகுதியை ட்ரோன்கள் மூலம் ஸ்கேன் செய்து தீவிரத் தேடுதல் பணியைத் தொடங்கியது. இந்நிலையில் காணாமல்போன சிங்கம் லயன் சபாரி என்ற பகுதியில் இருப்பது டிரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இரவில் வெப்ப இமேஜிங் டிரோன் கேமரா மூலம் தொடர்ந்து 5 பேர் கொண்ட குழு கண்காணித்து வருகிறது. லயன் சபாரி பகுதியில் இருந்து சிங்கம் தானாகவே உணவுக்காக கூண்டுக்கு வந்துவிடும் என பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.