வால்பாறை அருகே வீட்டை உடைத்து காட்டு யானை தாக்கியதில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்த சோகம்!!
கோவை: வால்பாறை காடம்பாறை பகுதியில் வீட்டை உடைத்து காட்டு யானை தாக்கியதில் பாட்டி, பேத்தி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே கடம்பாறை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்குள் நேற்று இரவு காட்டு யானை புகுந்தது. அங்கு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் அதிகாலை 4 மணி அளவில் புகுந்த காட்டு யானை அங்கு உறங்கிக்கொண்டிருந்த அஞ்சலா (வயது 55) என்ற பெண்ணையும், அவரது பேத்தியான ஹேமாஸ்ரீ (வயது 3) என்ற பச்சிளம் குழந்தையும் தாக்கியது.
யானை தாக்கியதில் பச்சிளம் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அதேவேளை, அஞ்சலாவின் அலறல் சத்தம் கேட்டு விரைந்துச் சென்ற கிராம மக்கள் காட்டு யானையை விரட்டியுள்ளனர். பின்னர், படுகாயங்களுடன் அஞ்சலாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், யானை தாக்கி உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.