வல்லநாடு பெருமாள் கோயில் அருகே உயரமாக அமைக்கப்பட்ட புதிய சாலையால் விபத்து அபாயம்
செய்துங்கநல்லூர் : வல்லநாடு பெருமாள் கோயில் அருகே புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையால் விபத்து அபாயம் நிலவுகிறது.
வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் இருந்து அண்மையில் ஓட்டப்பிடாரத்திற்கு குடிநீர் கொண்டு செல்ல வெள்ளையத்தேவன் மணிமண்டபம் அருகில் இருந்து முருகன் கோயில், பெருமாள் கோயில் வழியாக பைப் லைன் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பைப் லைனில் இருந்து அடிக்கடி குடிநீர் கசிந்து தெருவில் ஓடுவதால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் தினமும் சேறும், சகதியுமான சாலையில் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்ததால் கான்கிரீட் சாலை அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் சுமார் 3 மீட்டர் நீளம் அரை அடி உயரத்திற்குச் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.
ஆனால் சாலையின் இருபக்கமும் மணல்கள் அணைத்து தரைதளத்துடன் சமதளப்படுத்தப்படாததால் எதிர் எதிரே வாகனங்கள் வரும்போது விலகி வழிவிடுவதில் வாகன ஓட்டிகளிடையே தினமும் பெரிய சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
பள்ளி வாகனங்கள் வரும்போது எதிரில் இருசக்கர வாகனங்கள் சாலையில் இருந்து கீழே இறங்கும்போது சாலை பெரிய திண்டுபோல் உள்ளதால் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே கான்கிரீட் சாலையின் இருபுறமும் மணல் அணைத்து சமதளப்படுத்தி விபத்தை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.