மனவலிமை உடையவர்கள் தோற்றுப்போவதில்லை!
மனவலிமைதான் வெற்றியின் அஸ்திவாரம். மன வலிமையே தன்னம்பிக்கையாக மலர்கிறது. பின்னர் அது சாதனையாக நிகழ்கிறது.ஆகவே மனதை வலிமை உடையதாக ஆக்குங்கள்.தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டாலும் மனம் கவலை என்கிற சகதியில் மூழ்கி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தோல்விகளே மனதிற்கு வலுவை ஊட்டுகின்றன. தோல்வி என்பதை ஏதோ ஒரு இழப்பாக கருதாமல் தோல்வியை ஒரு படிப்பினையாகக் கொள்ளும் மனப்பக்குவம் ஏற்பட வேண்டும். தோல்வியானது உங்கள் மனதில் தழும்புகளை ஏற்படுத்தி தாழ்வு மனப்பான்மைக்கு வித்தாக அமைந்து விடக்கூடாது. தோல்வியை ஒரு வாய்ப்பாக கருத வேண்டும். அதாவது உங்கள் மன வலிமையை மேம்படுத்துவதற்கும், உங்கள் திறமையை மென்மேலும் வளர்த்துக் கொள்வதற்கும் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகக் கருதிச் செயல்பட வேண்டும். தோல்வி நேர்ந்து விட்டதே என்று எண்ணி முடங்கிவிடக்கூடாது.முடங்கி கிடந்தால் வாழ்க்கையே முடங்கிவிடும். சவால்களை சந்தித்து அவற்றை வெல்வதற்கு மன உறுதியை மட்டுமே நம்பினால் போதும். எல்லா ஆற்றலும்
உங்களை நாடிவரும்.
பலவீனத்திற்கு மாற்று மருந்து அதை நினைத்து கவலைப்படுவதில் இல்லை.வலிமையை பற்றி மீண்டும் மீண்டும் நினைத்தாலே, ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்து கிடக்கும் வலிமையை நாம் ஒவ்வொரு இந்தியனுக்கும் கற்பிக்க வேண்டும் என்கிறார் விவேகானந்தர்.ஆம், நமக்குள் உள்ள ஆற்றலின் பரிணாமங்களை உணர்ந்துகொண்டால் உன்னத உயரங்களைத் தொட முடியும். ஆனால் நம் மனதை நமக்கு நேர்ந்த துன்பங்களைப் பற்றியும், நமது பலவீனங்களைப் பற்றியும் சிந்திக்க பழக்கப்படுத்தி வைத்திருக்கின்றோம். அதற்குப் பதிலாக நமது மனதை வலிமையைப் பற்றி சிந்திக்க பழக்கப்படுத்திவிட்டால். அது நமக்கு கடவுள் கொடுத்த ஆற்றல்களை முழுமையாக வெளிக்கொணர உதவி செய்யும்.
வாழவேண்டும், சாதிக்க வேண்டும் என்னும் வைராக்கியத்தை நாம் மரங்களிலிருந்து கற்றுக் கொள்ளலாம்.பலமற்ற மரம் முருங்கை. காற்று அதை ஆட்டிப் பார்ப்பது மட்டுமல்ல, அடியோடு வீழ்த்தி விடுகிறது. ஆனால் வெட்டி எறிந்த வெற்று முருங்கைத் துண்டு கூட மண்ணில் புதைந்து வேர்விடத் தொடங்குகிறது. துளிர்கள் ஆரம்பமாகிறது. விருட்டென்று எழுந்து விஸ்வரூபம் காட்டுகிறது. முருங்கை மரத்தின் வெட்டி எறிந்த துண்டு கூட தழைக்கிறது.வாழ வேண்டும் என்கிற வைராக்கியம் மரத்திற்கு இருக்கிறதே! ஆனால் இது எத்தனை மனிதருக்கு இருக்கிறது.வாழ்க்கையில் விபத்து எப்போது நேரும் என யாருக்கும் தெரியாது. ஆனால் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் வாழ்க்கையை புரட்டிப் போடும் விபத்து சிலருக்கு நேரும். அப்படி தனக்கு ஏற்பட்ட விபத்தை மன வலிமையால் வென்ற ஒரு சாதனை மங்கைதான் பார்வதி.
கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்தவர் பார்வதி கோபகுமார். இவரது தந்தை கோபகுமார் மாநில வருவாய்த் துறையில் தாசில்தாராக பணிபுரிகிறார். தாயார் கலா நாயர் பள்ளி ஆசிரியை. பார்வதிக்கு ஒரு தங்கை உள்ளார். அவர் தற்போது திருவனந்தபுரம் கல்லூரியில் பயின்று வருகிறார்.சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு, பார்வதி 12 வயது சிறுமியாக இருந்தபோது, ஒருநாள் தந்தையுடன் ஸ்கூட்டரில் செல்லும்போது பின்னால் அமர்ந்திருந்த பார்வதி விபத்தில் சிக்கினார். இதில் அவரது வலது கை பாதிக்கப்பட்டு, அதனை மருத்துவர்கள் நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனாலும் மனம் தளரவில்லை பார்வதி. இரண்டு கைகள் மூலம் செய்ய வேண்டிய வேலைகளை தன் ஒரு கை மூலமே செய்யக் கற்றுக் கொண்டார். விடாமுயற்சி மற்றும் தொடர் பயிற்சியால், இடது கையால் வேகமாக எழுதப் பழகினார். அதோடு, விபத்திற்கு முன்பிருந்த தனது ஐஏஎஸ் கனவையும் அவர் மீண்டும் தனது கையில் எடுத்தார்.
தனது தந்தை தாசில்தார் என்பதால், அவரோடு அடிக்கடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற போது, அங்கிருந்த கிருஷ்ண தேஜா என்ற உதவி ஆட்சியரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது பார்வதிக்கு. அப்போது அவர் விதைத்த கலெக்டராக வேண்டும் என்ற விதைதான் அவரது ஆழ்மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.மாற்றுத்திறனாளி என தன்னைப் பார்த்து இரக்கப்பட்டவர்கள் மற்றும் கேலி செய்தவர்களுக்கெல்லாம் தன் வெற்றிகள் மூலம் பதிலளிக்கத் தொடங்கினார் பார்வதி. தொடர்ந்து படிப்பில் தனது திறமையை வெளிக்காட்டிய அவர் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து, பெங்களூருவில் சட்டம் படித்தார். சட்டம் படித்துக் கொண்டே, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கும் தயாரானார்.
அதன்பலனாக,தனது 27வது வயதில், கடந்த 2023ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் 282வது இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளார். மாற்றுத்திறனாளியாக விதி மாற்றிய போதும், இடது கையை மட்டும் வைத்துக் கொண்டு, இந்தத் தேர்வை அவர் எழுதி, தனது தன்னம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.பார்வதி கோபகுமார் தற்போது, எர்ணாகுளம் மாவட்டத்தின் உதவி ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.ஒரு கை மட்டுமே இருந்தாலும், அதனால் தன் கனவு கலைந்து விடக்கூடாது என, மனவலிமையோடு கடினமாக உழைத்து, ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது உதவி கலெக்டராக பொறுப்பு வகித்து வரும் பார்வதிக்கு சமூகவலைதளப் பக்கங்களிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
படிப்பதைத் தாண்டி எழுதுவதிலும் பார்வதிக்கு ஆர்வம் அதிகமாம். அவரது பல கவிதைகள் கேரள பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன குறிப்பிடத்தக்கது. பார்வதியின் வாழ்வில் நடந்தது போல வேறு யாருக்காவது நடந்திருந்தால் விபத்தின் சுவடுகளிலே வருந்தி வீட்டின் மூலையில் முடங்கி போயிருப்பார்கள். ஆனால் வலியைக் கடந்து கனவுகளை நோக்கிப் பயணித்து சாதித்த சாதனை மங்கைதான் பார்வதி.சாதாரண மக்கள் தங்கள் கஷ்டம் குறித்து சொல்லும் போது நான் எனக்கு நேர்ந்த விபத்து குறித்து மகிழ்ச்சி அடைவேன். இல்லையெனில் என்னை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளை நான் இழந்து ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்திருப்பேன் என்கின்றார். இவரது வாழ்க்கை இன்றைய பெண்களுக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால் ‘‘நேற்றைய துயரங்களுக்காக வருந்தாமல் இன்று இப்போது இந்த கணத்தில் முயன்றால் கூட வெற்றி பெற முடியும்” எல்லாவற்றிற்கும் மேலாக மன வலிமை உடையவர்கள் தோற்றுப் போவதில்லை என்பதுதான்.