வலங்கைமான் தாலுகாவில் 98 சதவீதம் சம்பா நடவு பணி முடிந்துள்ளது
வலங்கைமான் : வலங்கைமான் தாலுகாவில் 98 சதவீதம் சம்பா நடவு பணிகளும் 50 சதவீதம் தாளடி நடவு பணிகளும் நடைபெற்றுள்ள நிலையில் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்திற்குள் தாளடி நடவு பணிகள் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலங்கைமான் தாலுகாவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளன் ஆறு மூலம் பாசன வசதி பெறுகின்றது. நடப்பாண்டு சுமார் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் நேரடி விதைப்பு மூலம் சுமார் 20 சதவீத ஹெக்டேர் நிலப்பரப்பும் இயந்திர நடவு மூலம் சுமார் 40 சதவீத ஹெக்டேர் நிலப்பரப்பும் வழக்கமான விதை விட்டு கை நடவு மூலம் சுமார் 40 சதவீத ஹெக்டேர் நிலப்பரப்பும் சாகுபடி மேற்கொள்ளபட்டது.
வலங்கைமான் தாலுக்காவில் நடப்பு சம்பா பட்டதில் சாகுபடி முன்னதாக சுமார் 20 ஆயிரம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் நெல் நடவு மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் விதை விடும் பணி முன்னதாக முடிவு பெற்றதை அடுத்து தற்போது வரை 98 சதவீத அளவு பரப்பளவில் சம்பா நடவு மேற்கொள்ளப் பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் நீண்டகால நெல் ரகத்தினை விவசாயிகள் நடவு செய்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த வட மாநில தொழிலாளர்கள் வேளாண்மை பணிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இயந்திர நடவுக்கு நிகராக நடவு பணிகளில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளர்கள் நமது பகுதிகளில் வழங்கப்படும் ஊதியத்தை விட குறைவாக இருப்பதாலும் ஆட்கள் பற்றாக்குறை தவிர்க்கும் வகையிலும் வட மாநில தொழிலாளர்களை விவசாயிகள் ஈடுபடுத்தி வருகின்றனர்.
ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4500 என்ற சொற்பத்தொகையில் நடவு பணிகளில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இம் மாதத்திற்குள்ளாக சாம்பா நடவுப் பணிகள் வலங்கைமான் தாலுகாவில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதுவரை தாளடி சுமார் 50% அளவு நடைபெற்றுள்ள நிலையில் அடுத்த மாதம் 15 தேதிக்குள்ளாக தாளடி நடவு பணிகள் முடிவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வலங்கைமான் தாலுகாவில் வழக்கத்தை விட முன்னதாகவே சம்பா மற்றும் தாளடி முன்னதாகவே நடவு பணிகள் முடிவு பெறுகிறது.
டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டதை அடுத்து கை நடவு மற்றும் இயந்திர இயந்திரநடவு மூலம் 80 சதவீத பணிகள் நடைபெற்று வருகிறது.